
அரபிக்கடலுக்கும் மேற்கு மலைத் தொடருக்கும் இடையே கிடக்கும் 320 கி.மீ. நீளமான கர்நாடகத்தின் கடற்கரை அதிக செலவு பிடிக்காத சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருக்கிறது. உள்ளல் முதல் கார்வார் வரை எட்டு அழகான கடற்கரைகள் இருக்கின்றன.
கோகர்னாவுக்கு அருகில் உள்ள ஓம் கடற்கரை தவிர, பிற இடங்களில் எந்தவிதமான வணிக அம்சங்களும் இல்லை. சோமேஸ்வரா (உள்ளல்), கர்க்த் கல், மால்பி, மாரவந்தி, சோமேஸ்வரா (பிந்தூர்), முருதேஷ்வரா, கோகர்னா மற்றும் கார்வார் ஆகியவை பார்த்து ரசிக்கவேண்டிய கடற்கரைகள். தேசிய நெடுஞ்சாலை 17 கர்நாடகாவில் உள்ள அனைத்து கடற்கரைகளும் இட்டுச் செல்லும்.
உள்ளலில் இருக்கும் சோமேஸ்வரா கடற்கரை யாத்திரை ஸ்தலம். அங்கு சோமேஸ்வரா ஆலயம் கடற்கரையில் உள்ளது. இங்கிருக்கும் சம்மர் சான்டபீச் ரிசார்ட் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ஓரளவுக்கு குறைவான கட்டணத்தில் இங்கே நீண்ட நாள் தங்கியிருக்க முடியும். கர்த்கால் மங்களூருக்கு வடக்கே உள்ளது. மாலை நேரத்தை இங்கே இனிமையாக கழிக்கலாம்.
மால்பி உடுப்பியிலிருந்து 6 கி.மீ. மேற்கே உள்ளது. இது மிக அழகான கடற்கரை. இங்கிருந்து செயின்ட் மேரி தீவுக்குப் பயணம் மேற்கொள்வது மிகவும் அற்புதமான அனுபவம். மால்பி கடற்கரையில் சில ரிஸார்ட்டுகள் இருக்கின்றன. மாரவந்தி அருகே ‘டர்ட்டில் பே பீச் ரிஸார்ட்’ இருக்கிறது. அது தங்குவதற்கு மலிவானது. இங்கு கொல்லூர் ஆறு இருக்கிறது. ஒருபுறம் கடல், இன்னொரு புறம் ஆறு! பிந்தூருக்கு அருகே சோமேஸ்வரா கடற்கரை உள்ளது. இங்கு பிந்தூர் நதி அரபிக்கடலைச் சேருகிறது. இவ்விடத்தில் ஒரு கோயிலும் உள்ளது.
கர்நாடகாவின் வடக்கு மாவட்டக் கடற்கரையான முருகதேஷ்வரா ஒரு விடுமுறையைக் கழிக்கும் இடமாகவும், யாத்திரை ஸ்தலமாகவும் உள்ளது. பட்கல் நகரத்திலிருந்து 10 கி.மீ. தள்ளி உள்ளது. இங்கு ஓர் அழகான பீச் ரிஸார்ட் கடல் அலைகளுக்கு பக்கத்திலேயே உள்ளது. அங்கிருக்கும் உணவகம் கடலுக்குள் இருக்கிறது. இங்கிருந்து நேத்ராணி தீவுக்குச் செல்லலாம். அது ஒரு பவளப்பாறை தீவு. அங்கும் ஒரு கோயில் உள்ளது.
முருதேஷ்வரா கடற்கரையிலிருந்து 19 கி.மீ. தள்ளி அரபிக்கடலில் அது இருக்கிறது. படகில் செல்ல ஒரு மணி நேரம் ஆகும். கோகர்னா அருகில் இருக்கும் ஓம் கடற்கரை கோவா போல இருப்பதால் வெளிநாட்டினர் நிறைய பேர் இருப்பர்.
இந்த வரிசையில் கடைசியாக வருவது கார்வார். ரவீந்திரநாத் தாகூர், இதை உலகின் மிக அற்புதமான கடற்கரை என்று கூறினார். கார்வார் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தைக் காண்பது மனதுக்கு நிறைவளிக்கும் அனுபவம்.