Header Banner Advertisement

அச்சம் தவிர்க்க சொல்லும் தில்லைக்கரசி !


avoid apprehension thillaikarasi

print

முப்பத்து நான்கு ஆண்டுகள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இதைத்தாண்டி பலதரப்பட்ட மக்களோடு பழகிய நாட்களும் அனுபவங்களும்தான் என்னை உங்களோடு இப்போது பேச வைக்கிறது.

பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு எதிரான போர்க்கொடியா? இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம்.

எனதருமை தோழிகளே…தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா?

நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதெல்லாம் மனது வலிக்கும்; ஆனாலும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள், அடுத்தடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

ஒருவேளை, நீங்கள் தோற்காமலே போயிருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
தோல்விகளும்கூட சுகமானவைதான். தோற்றுப்போய் அதிலிருந்து மீண்டு வெளிவரும்போது உங்களில் ஒரு புதிய மாற்றத்தை நிச்சயம் உணர்வீர்கள்.

அவமானங்களும், எதிர்ப்புகளும் அதிகமாக அதிகமாக உங்களின் வெற்றிகள் அதிகமாகும் என்று எண்ணுங்கள்.

நாம் அடிக்கடி பேருந்து நிலையங்களில் வெள்ளரிக்காய் விற்கும் அந்த பாட்டியை பார்த்திருக்கிறோம். பேருந்து வந்து நின்றவுடன் தன் வயதை மறந்து, வயிற்றுப் பிழைப்புக்காக ஓடி வந்து, “கண்ணு வாங்கிக்க ராசா வாங்கிக்க… வெயில் சூட்டுக்கு எதமா இருக்கும்,” என்று தன்னுடைய தொழிலை மிகச்சரியாக மார்க்கெட்டிங் செய்யும் அந்த மூதாட்டியின் குரல் எத்தனை பேரின் காதில் விழுந்து, எத்தனை பேர் அவளிடம் வியாபாரம் செய்திருக்கிறோம்?

பாட்டியை ஏறெடுத்துப் பாராமல் அலைபேசியில் அமிழ்ந்து போனவர்களும், நாளேடுகளுக்குள் தலை புதைந்து போனவர்களும் அங்கே பாட்டியின் தன்னம்பிக்கையை அசைக்க முடியாது.

யாருமே வாங்காமல் போனாலும் அடுத்த வண்டிக்காக காத்திருந்து ஓடிப்போய் மறுபடியும், “கண்ணு வாங்கிக்க ராசா வாங்கிக்க…வெயில் சூட்டுக்கு எதமா இருக்கும்..!,” என்று மீண்டும் குரல் கொடுக்கும் பாட்டியிடம் நான் தன்னம்பிக்கையின் உச்சத்தைப் பார்க்கிறேன்.

ஒரு பெண்ணுக்கு திடீரென்று ஒரு நாள் ஓர் ஆசை வந்தது. இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் மாற்ற வேண்டும் என்பதுதான் அவளின் ஆசை. ஏதோ சில வேலைகள் செய்கிறாள். ஆனால் அவளால் இந்த உலகத்தை மாற்ற முடியவில்லை.

அவள் மனதில் ஓர் எண்ணம். நம்மால் இந்த உலகத்தைதான் மாற்ற முடியவில்லை. போனால் போகட்டும். நாம் இருக்கும் நம் தேசத்தையாவது மாற்ற முயற்சிப்போமே என்பதுதான் அது. சில முயற்சிகள் செய்கிறாள். ஒரு பலனும் இல்லை. அவளின் தேசம் மாறவே இல்லை.

மீண்டும் அவள் மனதில் ஓர் எண்ணம். நம்மால் இந்த தேசத்தைதான் மாற்ற முடியவில்லை. போனால் போகட்டும் நாம் இருக்கும் இந்த ஊரையாவது மாற்ற முயற்சிப்போமே என்று முடிவு செய்கிறாள். மீண்டும் சில முயற்சிகள். ம்ஹூம்…ஒரு மாற்றமுமில்லை.

மறுபடியும் ஓர் எண்ணம். அட…நம் ஊரைத்தான் மாற்ற முடியவில்லை. குறைந்தபட்சம் நம் வீட்டையாவது மாற்றுவோமே என்று எண்ணி ஏதேதோ வேலைகள் செய்கிறாள். ஒரு பலனுமில்லை. இதற்குள் அவள் வயோதிகப் பருவம் அடைந்து விட்டாள்.

அப்போதுதான் அவளுக்குப் பொறி தட்டியது. ஒருவேளை நான் மாறியிருந்தால் என் ஊர் மாறியிருக்கும். என் ஊர் மாறியிருந்தால் என் தேசம் மாறியிருக்கும். என் தேசம் மாறியிருந்தால் இந்த உலகமே மாறியிருக்கும் என்று அவள் மனதிற்குள் புதிய எண்ணம் தோன்றியது. ஆம்…அதுதான் உண்மை.

ஒவ்வொரு பெண்ணும் தனி நபரல்ல. ஒரு சமுதாயம். இதில் மாற்றங்களைக் கொண்டு வர செவ்வாய் கிரகத்தில் இருந்து யாராவது வர முடியுமா என்றால் சாத்தியமே இல்லை. எங்கேயிருந்து, எப்போதிருந்து ஆரம்பிப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க நேரமில்லை. மாற்றங்களை இன்றே இப்பொழுதே இந்த நொடியே ஆரம்பித்தாக வேண்டும்.

முதலில் பெண்களின் பாதுகாப்பில் அக்கறை கொள்வோம். நம் நாட்டில் டெல்லி நிர்பயா, கேரளா திஷா சட்டக்கல்லூரி மாணவி, சென்னை மென்பொறியாளர் சுவாதி, பால்மணம் மாறாத பிஞ்சுக்குழந்தை ஹாசினி என எத்தனை இழப்புகள். இதன் விளைவுகள் யார் யாரையோ பாதிக்கின்றன. பதற்றமான சூழலில் சிக்கிக்கொண்டு திக்குமுக்காடித் தவிக்கிறோம்.

பெற்றோர்கள், பெண் பிள்ளை களை எப்படி பாதுகாப்பது என்ற கவலையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். வெறித்தனமான, காட்டு மிராண்டித்தனமான இந்த மாபாதக செயல்கள் புரிந்த மனித மிருகங்களைப் பெற்ற தாய்கள் எங்கே போனார்கள்?
பெண்களின் பாதுகாப்புக்கு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்?

இது காவல்துறையின் பணி என்றெல்லாம் சொல்லி நாம் சும்மாவேனும் கையைக் கட்டிக்கொண்டு இருக்க முடியாது. பயம் காட்டுவதால் மட்டுமே இந்த நிலை மாறுமா…? அப்படியென்றால் ஒவ்வொரு குற்றவாளியும் பெறும் தண்டனை, அடுத்த தவறு நடக்காமல் செய்திருக்க வேண்டுமே?

மனதளவில் ஒவ்வொரு மனிதனும் ஈவு, இரக்கத்தோடு இருக்கவும் மனிதநேயத்தை வளர்க்கவும் முன்வர வேண்டும். இது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இந்த நாட்டில் உள்ள அத்தனை தாய்மார்களும் ஒருசேர தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணைப் போற்றவும், பாதுகாக்கவும் சொல்லிக் கொடுங்கள்.

பெண் பிள்ளைகளுக்கு எது பாதுகாப்பு என்றும், நட்பு என்ற பெயரில் தேவையற்ற வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்பதையும் புரிய வையுங்கள். இதனால் உங்கள் பிள்ளைகளுக்குக் கோபம்கூட வரலாம். பரவாயில்லை.

உண்மையில் இன்றைய பெண்கள் மிகவும் திறமைசாலிகள். சும்மாவேனும் பெண்களுக்கு முன்னுரிமை தாருங்கள் என்றெல்லாம் இனி புலம்பவோ, மேடையேறி கதறிக் கொண்டோ இருக்க வேண்டாமே.

பெண் குழந்தைகளே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் கல்விக்கும், திறமைக்கும் யார் தடை போட முடியும்?. சூழ்நிலைகளை புரிந்து கொண்டால் போதும். தைரியமாக, தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். உங்களின் வெற்றி நிச்சயம்.

இந்த கட்டுரை வாயிலாக  அச்சம் தவிர்க்க  சொல்லும் மென்திறன் பயிற்சியாளர் தில்லைக்கரசியிடம்   பேச அவரது கைப்பேசி எண் : 98948 07075.

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம்