Header Banner Advertisement

குரைக்கும் மான்களை கண்டதுண்டா..!


barking deer

print

மான்கள் குரைக்கும் சத்தம் அதிகமாகவே கேட்கிறது இந்த சரணாலயத்தில். வேறு எந்த கானுயிர் சரணாலயங்களிலும் இப்படியொரு ஓசையை நீங்கள் கேட்டிருக்க முடியாது. சத்தீஸ்கர் மாநிலம் இயற்கை வளமும் வனவளமும் நிறைந்த மாநிலமாகும். இந்த மாநிலத்தின் மஹாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பர்ணவபாரா சரணாலயம் மற்ற சரனாலயங்களைவிட சற்று வித்தியாசமானது.

இலையுதிர் காடுகளால் ஆன இந்த சரணாலயத்தில் தெண்டு, பேர், சீமால், சால், தேக்கு, மூங்கில் போன்ற மரங்கள் ஏராளமாக இருக்கின்றன. சமவெளியும் மலைப்பிரதேசமும் இணைந்து காட்சியளிப்பதே இந்த சரணாலயத்தின் சிறப்பாகும்.

1972-ல் இந்தப் பகுதி காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இது 245 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 265 மீட்டர் உயரத்திலிருந்து 400 மீட்டர் உயரம் வரை அமைந்திருக்கிறது. இங்கு நான்கு கொம்பு மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, மலைப்பாம்பு, குரைக்கும் மான், கழுதைப் புலி, முள்ளம்பன்றி, புள்ளிமான், கருப்பு மான் ஆகிய பல விலங்குகள் இங்கு கட்டற்று சுற்றித் திரிகின்றன.

விலங்குகளுக்கு இணையாக பலவகை பறவை இனங்களும் இங்கு வாழ்கின்றன. ஹெரான், புல்புல், பெருன்கொக்கு, காட்டுக்கிளி போன்றவற்றை இங்கு பார்க்கலாம். இயற்கை காதலர்களுக்கு இந்த இடம் ஓர் இயற்கை அற்புதம்.

வானிலை

அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரையான காலங்கள் இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற காலமாகும்.

எப்படி போவது?

இந்த சரணாலயத்தின் அருகே அமைந்திருக்கும் ஊர் சிர்பூர் ஆகும். இதன் அருகே அமைந்திருக்கும் பெரிய நகரம் ராய்பூர். இங்கிருந்து 74 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நகரில்தான் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளன. ஹவுரா மும்பை பிரதான ரயில் தடத்தில் இது அமைந்துள்ளதால் பிஸியான ரயில் நிலையமாக ராய்பூர் விளங்குகிறது. சென்னையிலிருந்து ராய்பூருக்கு விமான சேவை உள்ளது. சாலைப் போக்குவரத்திலும் சிறப்பாக விளங்குகிறது.

எங்கு தங்குவது?

சத்தீஸ்கர் சுற்றுலாத்துறை நடத்திவரும் ‘ஹியுன் ட்சிங் ரிஸார்ட்’ தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.2000 கட்டணமாக பெறப்படுகிறது. முன்பதிவுக்கு +91 771-4224600 என்ற தொலைபேசி எண்ணிலும் 1800 102 6415 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.