Header Banner Advertisement

‘நிறக்குருகு’ ‘இதய வாழ்வு’ ‘சிறுநீர் நாணம்’ ‘எலி வலை’


defult-img

print

என்ன பார்க்கிறீர்கள்? இப்படி எல்லாம் தமிழைக் கொல்லாதீர்கள் எனச் சொல்வது என் காதில் விழுகிறது. நான் கொல்லவில்லை. கொன்றது, மாண்புமிகு ஆசிரியர்கள்தான்.

நிறக்குருடு, இதய வால்வு, சிறுநீர் நாளம், எலி வளை ஆகிய சொற்கள் இப்படித்தான் பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்தன. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் முதன்முதலில் பாடப்புத்தகம் வழங்கப்பட்டபோது, பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்ற சொற்கள்தான் அவை. இவை மட்டுமல்ல; இதுபோல் பல்வேறு சொற்கள். பல இடங்களில் கருத்துப் பிழைகள் வேறு.

இந்தப் புத்தகங்களில் உள்ள பிழைகள் பின்னர் சரிசெய்யப்பட்டு, புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது வேறு கதை. சரி. இப்போது எதற்கு பழைய கதை எல்லாம் எனக் கேட்கிறீர்களா? அதையும் சொல்லி விடுகிறேன்.

“ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரைக்கூட எழுத முடியாத அளவுக்கு அவர்களது ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளது. இதற்கு ‘லெட்டர் பேடு’ கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் ஆசிரியர்கள்தான் காரணம்,” என கடந்த 15 நாட்களுக்கு முன் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையின்போது அதிருப்தி தெரிவித்து இருந்தது. இதுதான், இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான பின்னணி.

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதன்முதலில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 7.14 லட்சம் ஆசிரியர்கள் தேர்வெழுதினர். இதில் வெறும் 2448 பேர்தான் தேறினர். அதாவது, 0.34% மட்டுமே. அதே ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்விலும்கூட வெறும் 2.99% ஆசிரியர்கள்தான் தேர்ச்சி பெற்றனர்.

ஆசிரியர்களின் திறமையே, கடைசி பெஞ்ச் மாணவனைக் காட்டிலும் மோசமாகத்தான் இருக்கிறது. இருந்து வருகிறது.

மானுட சமுதாயத்திற்கு வீரியமிக்க நாற்றங்காலை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள்தான். வகுப்பறையில் ஆசிரியர்கள் சொல்வதை மட்டுமே வேதவாக்காக குழந்தைகள் நம்புகின்றன. ஆசிரியர்கள், நம்பிக்கையின் வடிவம்.

இந்த நேரத்தில் என் பள்ளி அனுபவத்தைச் சொல்ல விழைகிறேன். எங்கள் பள்ளியில் பணியாற்றிய மெய்யழகன் ஆசிரியரை எல்லா மாணவர்களுக்கும் ரொம்பவும் பிடிக்கும். அவருடைய வகுப்புகள் என்றாலே ஒரே குதூகலம்தான். அவர் புத்தகத்திற்கு வெளியேயும் கொஞ்சம் பேசுவார்.

நகைச்சுவையாக கதைகள் சொல்வார். என் அம்மாவுக்கு அடுத்து அவரிடம்தான் அதிக கதைகளைக் கேட்டிருந்தேன். அவர்தான் அந்த ஆண்டு நடந்த பள்ளி ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்றிருந்தார்.

கதை எழுதுவார்; கவிதை எழுதுவார். சினிமா பாடல் மெட்டுகளுக்கு ஏற்ப பாடல் எழுதுவார். எல்லாவற்றுக்கும் மேலாக நன்றாக ஓவியம் வரைவார். அவர் வரைந்து கொடுத்த பின்னர்தான் பாரதி மீது எனக்கு அளப்பரிய ஆர்வம் ஏற்பட்டது. 11 கோடுகள் மூலம் முண்டாசுக்கவியை எளிதாக வரையும் வித்தையை அவரிடம்தான் கற்றேன்.

எனக்கு ஒருமுறை அவர் ‘விவேகானந்தரின் பொன்மொழிகள்’ என்ற ஒரு கையடக்க நூலை பரிசளித்தார். பிறிதொரு நாளில் எம்.எஸ்.உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ நூலை பரிசளித்தார். இன்னொருமுறை அவர் எனக்கு கவிஞர் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப்பூக்கள்’ கொடுத்தார்.

எனக்குள் இருக்கும் இயல்பான கலை ஆர்வத்தை ஆழமாக கிளறி விட்டவர் அவர்தான். என்னை எழுத்துத்துலகுக்குள் உந்தித்தள்ளிய ஊக்கி. அவரிடம் இருந்து ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். நான் எனக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டேன்.

நன்னேஜான் என்ற இன்னொரு ஆசிரியர். அவர்போல திருக்குறளை விளக்கமாக சுவைபட சொல்லித்தர எனக்குத்தெரிந்து யாருமில்லை. ‘திரையிசையில் வள்ளுவம்’ என்ற தொடர் எழுத அவரே கர்த்தா.

இவையெல்லாம் ஒரு மாணவனாக நான் ஆசிரியர்களை உள்வாங்கியவை. ஆனால், பத்திரிகையாளனாக என் செவிகளுக்கு ஆசிரியர்களைப் பற்றி வரும் செய்திகள் 90% எதிர்மறையானவை.

இன்று 45 வயதுக்குட்பட்ட ஆசிரியர்களில் (ஆண், பெண் இருபாலருமே) பெரும்பாலானோர் வகுப்பு நேரத்தில்கூட ‘வாட்ஸ்-அப்’பில் லயித்திருப்பதைக் காண முடிகிறது.

ஆசிரியர்கள் (சிலர்) மாணவிகளை இழுத்துக்கொண்டு ஓடுவதும், குடிபோதையில் வகுப்பறைக்கு வரும் சம்பவங்களும் நாம் கேள்விப்படாததல்ல. மாணவனுடன் ஓட்டம் பிடித்த பெண் ஆசிரியரை ஊரே அறியும். சுய ஒழுக்கம் பற்றி எழுதினால் பக்கங்கள் போதாது. அதை விடுத்து, அவர்களின் திறமையை மட்டும் இங்கே பேசுவோம்.

ஆசிரியர் பயிற்சி பெறக்கூடியவர்கள் ஏதேனும் ஓர் அரசுப்பள்ளியில் 40 நாட்கள் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதைக்கூட பெரும்பாலான ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை ‘சரிக்கட்டி’ வருகைப்பதிவை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர்.

தரமற்ற விதைகளை விதைத்தால் வளமான மகசூல் எப்படி கிடைக்கும்? பன்முகத்திறனுள்ள ஆசிரியர்களாலேயே திறம் வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்க இயலும். கற்றல் அடைவுத்திறனும் அதிகரிக்கும்.

விதைத்தது வீரியமற்றதாக இருக்கும்போது அமோக விளைச்சலை எதிர்பார்ப்பதில் பயனில்லை.

ஊதியக்குழு, பஞ்சப்படி என ஏகப்பட்ட கவலைகளில் சிக்குண்டு கிடப்பதால் ஈழத்தமிழர் விவகாரம், காவிரி, ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் என அரசியல் விவகாரங்களுக்குள் ஆசிரியர்கள் ஒருபோதும் மூக்கை நுழைப்பதில்லை.

அதேநேரம், தப்பித்தவறி படைப்பூக்கத்துடன் செயல்படும் ஒன்றிரண்டு ஆசிரியர்களை ‘உள்ளரசியல்’ செய்து முடக்கி விடவும் தவறியதில்லை.

மாணவர்கள் செய்து வர வேண்டிய அறிவியல் பாட ஆக்கங்களை, வெளியில் இருந்து ‘ரெடிமேடு’ ஆக தயாரித்து விற்பதை வாங்கி வரும்படி கூறுகின்றனர். காரணம், ‘வரும்படி’.

பிளஸ்-2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் டியூஷன் எடுக்க குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். கூட்டம் அள்ளுகிறது. அதே சிரத்தையை, பள்ளி வகுப்பறையிலும் காட்டலாமே. ஏன் செய்வதில்லை. அரசு தரும் ஊதியம் குறைச்சலா என்ன?

பலமான கருவறையில் இருந்து தானே வளமான கருவை வளர்த்தெடுக்க முடியும்? கருவறையான கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக்கு வராமலேயே ஆசிரியர் ஆகலாம் என்று சொல்லித்தானே இன்றைக்கு சேர்க்கையே நடத்துகின்றன.

எனக்குத் தெரிந்து, எந்தவித உள்கட்டமைப்பு வசதிகளுமின்றி கல் குவாரியில் இயங்கி வந்த கல்வியியல் கல்லூரியும் உண்டு.

தமிழ்நாட்டில் மட்டும் 690 கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், 300 கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கல்வியியலில் பி.ஹெச்டி. முடித்தவர்களைத்தான் கல்வியியல் கல்லூரிகளில் முதல்வராக நியமிக்க வேண்டும். இதிலும் குளறுபடிகள். இதையெல்லாம் ஆராயாமல் தேசிய கல்வி கவுன்சில் தாராளமாக அனுமதி வழங்கி விடுகின்றன. பணம், சாதி, அரசியல் தலையீடுகளால் மாநில அரசும் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதில்லை.

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளைப்போல் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பட்டய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் முற்றிலும் வணிக நோக்கில் செயல்பட தொடங்கியதன் விளைவுதான், அரைவேக்காட்டு ஆசிரியர்கள் உருவாக காரணம்.

கல்வியியல் கல்லூரிகள் இப்படி என்றால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட, விரும்பிய இடத்திற்கு மாறுதல் பெற, ஆசிரியர் பணியில் சேர என எல்லாவற்றுக்கும் குறுக்கு வழியிலேயே முயல்கின்றனர். குறுக்கு வழி என்பது லஞ்சம் கொடுப்பது மட்டுமல்ல; சிபாரிசுக்கு ஆள் பிடிப்பதும்தான்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆசிரியர்களை வசை பாடுவதுதான் என்று கருதினால், அது புரிந்து கொள்ளுதலில் ஏற்பட்ட பிழையேயன்றி வேறொன்றும் இல்லை.

அறம் என்று சொல்லும்போதே ஆசிரியர் என்ற சொல்லும் சேர்ந்தே ஒலிக்கிறது. அறம் காக்கப்பட வேண்டும். அவ்வளவே.ஹ்

-பேனாக்காரன்.

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம்