Header Banner Advertisement

அடிவயிற்றில் ஏற்படும் வலியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கும் டாக்டர் வையாளி ராமு !


Description damage caused stomach pain doctor Ramu vaiyali

print

இன்றைக்கு மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்கள் ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் குறித்து  தனியார் மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் வையாளி ராமு கூறியதாவது :-

குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?:

பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், ‘ஹெர்னியா’, அதாவது ‘குடல் இறக்கம்’ என்கிறோம்.

அறிகுறிகள்?:

வயிறு வீங்கும். அடி வயிற்றுப் பகுதியில் வலி அதிமாக இருக்கும். சிலர் நடக்கவே சிரமப்படுவார்கள். வாந்திகூட ஆரம்பிக்கும்.

இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது?:

வயிற்றுப்பகுதி வலுவிழப்பது இயற்கைதான். ஆண்களுக்கு அவர்களின் இடுப்புக்குக் கீழ் அதாவது, அரைப்பகுதியில் சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன.

அந்தப் பாதையில் குடல் இறங்குவதுதான் ‘ஹெர்னியா!’. சில நேரங்களில், அந்த பகுதி வலுவிழக்க நேரிடும். தொப்புள் பகுதியும் வலுவிழந்து விடுகிற பகுதி. இவற்றின் வழியாக குடலிறக்கம் ஏற்படுகிறது.

பெண்களுக்கும் ஏற்படுமா?:

பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், குடலிறக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம். ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை எனப்படும், பேறுகால அறுவைச் சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகளுக்குப் பின் குடலிறக்கம் ஏற்படுகிறது.

பெண்களுக்கு வயது ஏற ஏற எடை கூடுவது இயற்கை. இப்படி எடை கூடுவது, வயிற்றுப்பகுதியை பலவீனமாக்குகிறது. கருவுற்றிருக்கும் காலத்தில் மாதம் ஆக ஆக வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி, வலுவிழக்கச் செய்கிறது. பெண்களிடையே தொப்புள் கொடிப்பகுதி வழியே ஏற்படும் குடலிறக்கம் வெகுசாதாரணமாக காணப்படுகிறது.

ஒருவர் இயற்கை உபாதைகளைக் கழிக்கும்போது, அளவுக்கு அதிகமாக (முக்குதல்) சிரமப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எளிதாகச் செல்லாமல் துன்பப்படுதல் ஆகியவை எவ்வாறு குடலிறக்கத்துக்கு காரணமாகின்றன?

இயற்கை உபாதைகளை கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும், அதன் காரணமாக குடலிறக்கம் ஏற்படும். ஆண்கள் முதுமை அடையும் காலத்தில் ‘புரோஸ்டேட்’ சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகின்றன. அவைதான் சிறுநீர் கழிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சிரமமே ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. இதுபோலவே, இயற்கை உபாதைகளைக் கழிக்க ஏற்படும் சிரமத்தாலும் இதே விளைவுதான் ஏற்படுகிறது.

ஒருவர் அதிகமான அளவிற்கு இருமுவதாலும், குடலிறக்கம் ஏற்படக்கூடுமா?

இருமல் வரும்போது வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே இருமலினாலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.

பளு தூக்குதல், அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது?

பளு தூக்குதல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது என்று உறுதிப்படுத்துவதற்கு, இதுவரை உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லை.

சிறிய அளவிலான குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறதா?

சிறிய குடலிறக்கம் காரணமாக, பெருங்குடல் வழியாக வெளியேறும் கழிவுப்பொருட்கள், நகராமல் நின்று அடைத்துக் கொள்வதற்கு, அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது இது ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்துகிறது. இதை அந்த நேரத்தில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாவிட்டால் அது இன்னும் பெரிய அளவிற்கு சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

குடலிறக்கத்தை சரி செய்வதற்கான சிறந்த வழிமுறைகள் என்ன?

சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை (மெஷ்), இறங்கிய குடலைத் தூக்கிப்பிடித்துத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும் அந்தப்பொருள் (மெஷ்), மீண்டும் குடலிறக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.

இது திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்தப் பகுதிக்கு வலுவூட்டும். மிகச்சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ‘மெஷ்’ சுருண்டு விடலாம். இவற்றை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.

ஒருவர் அறுவை சிகிச்சை முடிந்து எத்தனை நாட்கள் கழிந்தபின், மீண்டும் வேலைக்குச் செல்ல முடியும்?

அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், அந்த நோயாளியின் உடற்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத்தே இருக்கும். ‘லேப்ராஸ்கோப்’ கருவி மூலமாகவும் குடலிறக்கத்தை சரி செய்ய முடியும் என்று மருத்துவர் வையாளி ராமு கூறியுள்ளார்.

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம் , கைப்பேசி எண் : 98409 61947