
பரிவர்த்தனை யோகம் இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது பரிவர்த்தனை யோகம் ஆகும்!
இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும் அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.
அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும் எப்படி? வாருங்கள். அதைப்பார்ப்போம்.
அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும் ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் ஆனந்தம் கொள்ள வேண்டாம்.
பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும்.
இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள்.
1.தைன்ய பரிவர்த்தனை. தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும்.
2. கஹல பரிவர்த்தனை! மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும். மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும்.
3. மஹா பரிவர்த்தனை யோகம். 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும்.
பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு.
தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும்.
நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும்.
உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம். இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜாதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும்.
ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும்.
2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும்.
வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.
6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும்.
2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான் .,
1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.
1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான்.
9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு!
எச்சரிக்கை : இது அனைத்தும் பொது விதிகளே !