
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளிலுள்ள தெருக்களுக்கு குழாய்கள் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குறைந்த நேரம் குடிநீர் விநியோகம் செய்து வருவதால் பெரும்பாலான தெருக்களில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று போராடத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்னர் .
மதுரை மாநகராட்சியால் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது .
அதன் காரணமாக பள்ளமான தெருக்களில் வசிக்கும் வீடுகளில் பகல் பொழுதினில் குழாய்களில் குடிநீர் வந்தபோதிலும், மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இரவு நேரத்தில் எந்த நேரத்தில் குடிநீர் வரும் என்பதே தெரியாத நிலையில் பொதுமக்கள் தூக்கம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.
இந்த சூழலில் சில நேரங்களில் மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வரும் நேரத்தில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு விடும். அதனால் பலர் மதுரை மாநகராட்சிக்கு தண்டமாக குடி நீருக்கான வரியைக் கட்டிவிட்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் தனியார் நிறுவனங்களிடம் பணம் கொடுத்து குடிநீர் பெற்று உபயோகம் செய்து வருகின்றனர் என்பதுதான் நிதர்ச்னமான உண்மை .
இந்த சூழலில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-
பருவமழை பொய்த்ததால், மதுரையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 4 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போது, பெரியாறு அணை மற்றும் வைகை அணைப் பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், வைகை அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது.
எனவே, வருகிற அக்டோபர் 6ம் தேதி முதல் மதுரை மாநகராட்சியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது என்றும் குடிநீர் விநியோகிக்கப்படும் இடம் மற்றும் நேரம் விபரங்கள் அறிவிக்கப்பட்டது . மேலும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்டவை மூலம் தினமும் குடிநீர் விநியோகம் நடைபெறும் எனவும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது .
இந்த சூழலில் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த முறையை அக்டோபர் 6ம் தேதி முதல் மாற்றி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது .
இந்த முறைப்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் அல்லது அதிக பட்சம் 5 மணி நேரம் மட்டுமே குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்துடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக பல்வேறு வார்டு பகுதிகளில் பள்ளமான தெருக்களில் வசிக்கும் வீடுகளில் உள்ள குழாய்களுக்கு மட்டுமே குடிநீர் சப்ளை கிடைக்கிறது . அதுவும் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதால் வீடுகளில் உள்ள குழாய்களில் தானாக தண்ணீர் வருவதில்லை. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் என்பதே கிடையாது.
அதற்கு காரணமும் மாநகராட்சி அதிகாரிகள் தான். குறிப்பாக மதுரை வசந்த நகரிலுள்ள அக்ரினி அடுக்குமாடி குடியிருப்பினை தனியார் நிறுவனம் ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன் உருவாக்கிய போது அங்கு ராட்சத ஆழ்துளை குழாய்களை சட்டத்திற்கு புறம்பாக அமைத்தது. அதனை தடுத்து நிறுத்த வேண்டிய மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் பணியாற்றும் பணவெறிபிடித்த உயரதிகாரிகள் அந்த நிறுவன உரிமையளரிடம் பெருந்தொகையை கையூட்டு பெற்றுக் கொண்டு அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் என இன்றைய நாள்வரை பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நிலத்தடி நீரே இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதால் வீடுகளில் உள்ள குழாய்களில் தானாக தண்ணீர் வராத நிலையில் வசதியற்றவர்கள் குடிநீர் அடி குழாய்களை மிகவும் கஷ்டப்பட்டு அடித்து நான்கு நாட்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து பயன்படுத்தி வந்தனர். குடிநீர் அடி குழாய்களை அடிக்க முடியாதவர்கள் குடிநீர் மின் மோட்டார்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது . குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி உத்தரவு போட்டு மின் மோட்டார்களை பறிமுதல் செய்து கொண்டு அபராதம் வேறு விதித்து வருகிறது . சட்டப்படி பார்த்தால் குற்றம் செய்வதை காட்டிலும் குற்றம் செய்ய தூண்டியவர்களுக்குதான் அதிக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் .
மதுரை மாநகராட்சி வீடுகளில் உள்ள குழாய்களில் குடிநீர் வழங்கப்படும் எனக்கூறி அதற்கு வரி எனும் பெயரில் பணம் வசூலித்து விட்டு வீடுகளுக்கு தானாக தண்ணீர் வராதபடி பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை செய்வதே சட்டப்படி தவறான செயல். இதை காரணம் காட்டி பொது மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக மாநகராட்சி அபராதம் அளிக்க நேரிடும். மேலும் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை அளித்தால் வீடுகளில் உள்ள குழாய்களில் தானாக தண்ணீர் வராத நிலையில் குடிநீர் அடி குழாய்களை மிகவும் கஷ்டப்பட்டு அடிக்க முடியாதவர்கள் குடிநீர் மின் மோட்டார்களை பயன்படுத்தத்தான் செய்வார்கள். இந்த விவகாரத்தில் பொதுமக்களை மின் மோட்டார்களை குடிநீர் குழாய்களில் இணைக்கும் குற்றத்தினை செய்ய தூண்டியதும் மதுரை மாநகராட்சி தான் என சட்டவல்லுனர்களிள் கூறுகின்றனர்.
இந்த சுழலில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் வகையில் முறையை மாநகராட்சி மாற்றி அமைக்கா விட்டால் சாலை மறியல் போன்ற பல்வேறு விதமான போராட்டங்களை நடத்துவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்