
வறுமைக்கோடு என்கிற வார்த்தை பொருளாதார நிபுணர்களின் பேச்சில் அடிக்கடி அடிபடும் ஒன்று. வறுமைக்கோடு என்றால் என்ன? எதை வைத்து அதனைக் கணக்கிடுகிறார்கள் என்று ஆராய்ந்தால்.. அது உணவை அடிப்படையாக கொண்டது.
உணவின் மூலம் கிடைக்கும் ‘கலோரி’யைக் கொண்டே கணக்கிடுகிறார்கள். ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழத் தேவைப்படும் குறைந்தபட்ச கலோரியின் அளவு வறுமைக்கோடு என்று அழைக்கப்படுகிறது. தன் உணவின் மூலம் இந்த அளவு கலோரியைப் பெறுவதற்கு ஒரு தனி மனிதனின் வருமானம் போதுமானதாக இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக கருதப்படுவார்.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை நமக்குப் பெரிதும் உணர்த்துவது தனி மனித வருமானமே. அத்தகைய தனி மனித வருமானம் தமிழகத்தில் மகிழ்ச்சி தரும் நிலையில் இல்லை. 1960-க்குப்பின் இது தொடர்ந்து இந்தியாவின் சராசரியை விட குறைவாகவே இருந்து வருகிறது. அதனாலே இங்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை இந்திய சராசரியை விட அதிகம் இருக்கிறது. இதிலும் நகரத்தில் 31 சதவீதத்தினர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். இதுவே கிராமத்தில் 44 சதவீதத்தினர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.
கிராமங்களில் நிலமற்ற தொழிலாளர்கள் மத்தியிலும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மத்தியிலும் வறுமை அதிகமாக நிலவுகிறது. நகர மக்களை பொறுத்தவரை கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழிலில் ஈடுபடுவோர்கள் மத்தியிலும் இது மிகுதியாக இருக்கிறது.
ஒருவேளை இன்றைக்கு அவ்வையார் இருந்திருந்தால் ‘கொடிது கொடிது வறுமைக்கோடு கொடிது, அதனினும் கொடிது கடுமையான வறுமைக்கோடு’ என்று பாடியிருப்பாரோ..!