
தென்னிந்திய கட்டடக்கலையின் உச்சம் என்று வாரங்கல் கோட்டையை கொண்டாடுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். தெலுங்கு தேச சரித்திரத்தின் பொற்காலம் என்று போற்றப்படும் காகதீய அரசர்கள் கட்டிய கோட்டை இது. காகதீய வம்ச அரசரான கனபதிதேவ் 1199-ம் ஆண்டில் கட்டத்தொடங்கிய இந்த பிரமாண்ட கோட்டையை அவரது மகளான ருத்ரம்மா தேவி 1261-ல் முடித்து வைத்தார்.
சிற்பக்கலையும் கட்டடக்கலையும் போட்டிப்போட்டு உருவாக்கப்பட்ட கோட்டை. இப்படிப்பட்ட கோட்டையை வேறு எங்கும் காணமுடியாது. தங்கநகைகளில் உருவாக்கும் வடிவமைப்புகளை கல்லில் வடித்திருப்பதுதான் இதன் சிறப்பு. மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். வரலாற்று ஆய்வாளர்கள், பாரம்பரிய விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமான இடம் இது. தற்போது சிதலமடைந்து சேதப்பட்டுக் கிடக்கும் இந்தக் கோட்டை ஒரு வரலாற்று பொக்கிஷம். இதை ஒவ்வொருவரும் கட்டாயமாக வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் அத்தனை அழகு இந்த கோட்டை!
வானிலை
வாரங்கல் வெப்பம் மிகுதியான நகரமாகும். கோடைக்காலங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கடுமையாக இருக்கும். அதனால் அந்தக் காலங்கள் சுற்றுலாவுக்கு ஏற்றதாக இல்லை. சரி, மழைக் காலத்தில் போகலாம் என்றால் தென்மேற்கு பருவமழை வலிமையாக பொழியும் இடம் இது. மழையும் காற்றும் நம்மை வெளியே வரவிடாமல் செய்துவிடும். அதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலமே சுற்றுலாவுக்கு ஏற்ற காலமாகும்.
எப்படி போவது?
தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் இருந்து 163 கி.மீ. தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம்தான். சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடி விமான சேவை உள்ளது. பயண நேரம் 1.15 மணி. ஸ்பைஸ்ஜெட் விமானம் மிகக் குறைந்த கட்டணமாக ரூ.3,828-ல் இருந்து சேவை அளித்து வருகிறது. வாரங்கல் ரயில் நிலையம் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன. கட்டணம் படுக்கை வசதி ரூ.355, ராஜ்தானி விரைவு வண்டி ரூ.1,345 கட்டணமாக பெறப்படுகிறது. சென்னையிலிருந்து மாநில அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகள் சேவையும் உள்ளன.
எங்கு தங்குவது?
‘ஹோட்டல் கிரெண்ட் காயத்ரி’ தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.2,609 கட்டணமாக பெறப்படுகிறது. முன்பதிவுக்கு 0870 250 5999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.