
சரஸ்வதி ஆற்றின் அருகே பதினொன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த கிணற்றின் ஒவ்வொரு தளத்திலும் அருமையான பல சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தண்ணீரை தெய்வ வடிவமாகப் போற்றும் இவர்கள், தண்ணீருக்காக அமைத்த ஒரு தலைகீழ் கோவில் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு சிற்பத்திலும் அத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகளை நீங்கள் காண முடியும். தரைத் தளத்திலிருந்து படிகள் வழியே இறங்கிப் போக, ஒவ்வொரு நிலையிலும் சிற்பங்கள், நுட்பமான வடிவங்கள் என பார்த்துக் கொண்டே போகலாம். ஒவ்வொரு சிற்பத்திலும் அத்தனை வேலைப்பாடுகள். கண்களை சிற்பங்களிலிருந்து அகற்றுவது வெகு சிரமம் – அத்தனை அழகு அந்தச் சிற்பங்கள்.
Maru – Gurjara வகை சிற்பக்கலை என்று அழைக்கப்படும் இந்தச் சிற்பங்களில் புராணக் கதைகள், விஷ்ணுவின் அவதாரங்கள், தெய்வங்களின் உருவங்கள் என அனைத்துமே காண முடிகிறது. சுமார் 500 பெரிய சிற்பங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு சிற்பங்களும் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. நான்காம் நிலை, தரை மட்டத்திலிருந்து சுமார் 23 மீட்டர் கீழே அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழே மூன்று நிலைகள். கிணறு, அமைப்பின் மேற்கு ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பத்து மீட்டர் விட்டமும் 30 மீட்டர் ஆழமும் உள்ள கிணற்றின் அருகே செல்லும் பாதைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் உள்ள சிற்பங்களைப் பார்க்க ஒரு நாள் போதாது. அத்தனை நுணுக்கமான வேலைப்பாடு.
நுழைவாயிலில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில் இத்தனை அற்புதமான வேலைப்பாடு கொண்ட சிறபங்கள் இருப்பதே தெரியாது. ஐந்து ரூபாய் நுழைவுக்கட்டணம் கொடுத்து சற்றே நடந்து அருகே வந்த பிறகு தான் இந்த அற்புதமான சிற்பங்கள் நம் கண்களுக்குத் தெரிகின்றன. பார்த்த சில நிமிடங்களுக்கு நாம் பேச்சு மூச்சற்று சிற்பங்களின் அழகில் மெய்மறந்து நின்றுவிடுகிறோம். அந்த அளவுக்கு அழகான சிற்பங்கள் – அதுவும் பூமிக்கடியில். காலை எட்டு மணி முதல் மாலை 6 மணி வரை தான் இந்த இடத்தினைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ராணி கி வாவ் பகுதியில் அழகிய பூங்காவும் இருப்பதால் நிறைய பேர் இங்கே வந்து சிற்பங்களைக் கண்டுகளிப்பதோடு பூங்காவில் ஓய்வும் எடுப்பதைப் பார்க்க முடிந்தது.
மஹிஷாசுரமர்த்தினி, பார்வதி, சிவன் சிற்பங்கள், விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், பைரவர், விநாயகர், சூரியன், குபேரன், லக்ஷ்மிநாராயணன், அஷ்டதிக்பாலகர்கள், நாக கன்னிகைகள், தேவலோக ரம்பைகள் என பலருடைய சிற்பங்களும் இங்கே பார்க்க முடியும். 1958 வரை இந்த சிற்பங்கள் பூமிக்குள் புதைந்து கிடந்தன. கவனிப்பார் இல்லாமல் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய சிற்பங்கள் அழிந்து கொண்டிருந்தன. 1958-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் தொல்பொருளியல் துறை இவ்விடத்தினை தனது கீழ் கொண்டு வந்து புதைந்து கிடந்த சிற்பங்களையும் கிணற்றையும் மீட்டு நம் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்த ராணி கி வாவ் Unesco World Heritage Sites-ல் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த இடத்தினை நன்றாக பராமரிக்கிறார்கள் என்றாலும் இன்னும் நன்கு பராமரிக்க வாய்ப்புகள் உண்டு. அங்கே வரும் மக்கள் குப்பைகளை ஆங்காங்கே போட்டு விட்டுச் செல்வதை தடுக்கலாம். Swacchh Bharat Abhiyan App மூலம் சுத்தம், பராமரிப்பு பற்றிய தகவல் அனுப்பலாம் என எழுதி வைத்த பதாகை ஒன்று கண்டோம். அதன் கீழேயே சில குர்க்குரே பாக்கெட்டுகளும், கோலா பாட்டில்களும் கிடந்தது! எங்கே எப்படி என்றாலும், நாங்கள் திருந்த மாட்டோம் என்று சிலர் இருக்கிறார்கள் – என்ன செய்வது!
பாடன் செல்வது எப்படி?
அஹமதாபாத் நகரிலிருந்து பாடன் செல்லும் பேருந்துகள் உண்டு. சுமார் மூன்றரை மணி நேரப் பயணத்தில் [125 கிலோமீட்டர்] அஹமதாபாத்திலிருந்து பாடன் சென்றடைய முடியும். ரயிலில் செல்வது என்றால் மெஹ்சானா வரை வந்து அங்கிருந்து பேருந்து மூலம் ஒன்றரை நேரப் பயணத்தில் பாடன் வந்து விடலாம். விமானப் பயணம் எனில் அருகிலுள்ள விமான நிலையம் – அஹமதாபாத் மட்டுமே. ஆகையால் அஹமதாபாத் வரை விமானத்திலோ, ரயிலிலோ வந்து அங்கிருந்து சாலை வழி பயணிப்பது நல்லது.
தங்குமிடங்கள்: பாடன் ஒரு மாவட்டம் என்றாலும், இங்கே தங்கும் வசதிகள் அத்தனை அதிகமில்லை. சில தங்கும் வசதிகள் இருக்கின்றன என்றாலும், ஒரு நாள் பயணமாக இங்கே வந்து அஹமதாபாத் திரும்புவது நல்லது.
பக்கத்தில் இருக்கும் மற்ற சுற்றுலாத் தலங்கள்: கோட்டை, ஜெயின் கோவில்கள், ஸஹஸ்ரலிங் சரோவர், ஆனந்த் சரோவர், கான் சரோவர், சித்த்பூர் [மாத்ரு கயா], கால்கா மந்திர், பஞ்ச்முகி ஆஞ்சனேயர் மந்திர் போன்றவை.
படான் – பிரபலமான விஷயங்கள்: படோலா என அழைக்கப்படும் புடவைகள் இங்கே மிக பிரபலம். Salvivad எனும் இடத்தில் இந்த படோலா புடவைகள் மற்றும் களிமண் பொம்மைகள் செய்கிறார்கள். படோலா புடவைகள் வேண்டுமென்றால் இங்கே வாங்கலாம் – ஆனால் விலை கொஞ்சம் அதிகம் சொல்வார்கள். கவனம் தேவை!
குஜராத் செல்லும் வாய்ப்பிருந்தால், இந்த பாடன் நகரத்திற்கும் சென்று அழகிய சிற்பங்கள் அமைந்திருக்கும் ராணி கி வாவ் சென்று வாருங்கள். சிற்பங்களைப் பார்த்து நீங்களும் வாவ் என நிச்சயம் சொல்வீர்கள்…