
மத்தியப் பிரதேசத்தில் சத்புரா மலைத்தொடரில் அமைந்திருக்கிறது பச்சமர்ஹி. அங்கு செல்வது சிரமம். அந்த சிரமம் பச்சமர்ஹியைப் பார்த்ததும் பறந்துபோகும். இருண்ட குகையின் முடிவில் ஒளியை சந்திப்பது போன்ற அனுபவம் அது. அதிகமான செலவு பிடிக்காத இடம்.
காடுகளுக்குள் சில நேரம் அலைந்து திரிந்து ஏராளமான சிறு விலங்குகளையும், சிறு சிறு நீர்வீழ்ச்சிகளையும் கண்ட பிறகு இந்த மலை வாசஸ்தலம் நம்மை மேலும் மேலும் சுற்றி அலையத் தூண்டுகிறது. பச்ச என்றால் ஐந்து, மர்ஹி என்றால் குகை. ஐந்து குகைகள் என்பதுதான் இதன் அர்த்தம்.
அஞ்ஞாதவாசத்தின்போது பாண்டவர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் இடம்.பாண்டவர்கள் மறைந்திருந்த குகைகளை காண தவறாதீர்கள். சத்புரா தேசியப் பூங்காவில் விலங்குகளைக் காணலாம். சாகஸ விரும்பிகளுக்கு சவ்ராகாரில் உள்ள மலைக்கோயிலுக்கு மலையேறி செல்லலாம். அல்லது இருண்ட ஜதா சங்கர் குகைகளுக்குள் செல்லலாம். தூப்கர் செல்லும் வழியில் பள்ளத்தாக்கில் கேட்கும் பறவைகளின் எண்ணற்ற ஒலிகள் பரவசமூட்டும்.
இந்த மலைத் தொடரில் அரிதான பல தாவரங்கள் இருப்பதால், இதனை யுனெஸ்கோ பல்லுயிர் உயிர்க்கோள மண்டலமாக 2009-ம் ஆண்டு அறிவித்தது. பஞ்சமர்ஹி சிறிய ஊர். இந்த பகுதியில் ராணுவ முகாம் இருப்பதால் இந்த ஊரில் வசிப்பவர்களில் பலரும் ராணுவத்திலேயே பணி புரிகிறார்கள். இங்கிருக்கும் காடுகளில் உள்ள குகைகளில் ஏராளமான குகை ஓவியங்கள் உள்ளன. சில ஓவியங்கள் 10,000 வருடத்திற்கு முந்தையது என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பச்சமர்ஹி இயற்கை அன்னையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடம். இங்கு செழிப்பான தாவர இனங்களும் விலங்கினங்களும் உள்ளன. எங்கும் பசுமை நிறைந்த திகைப்பூட்டும் நிலப்பரப்பை தன்னுள் கொண்டுள்ளது. நீர்வீழிச்சிகள், மலை ஓடைகள் என்று எல்லாமே நம் மனதை குளிர்ந்து போக வைக்கிறது.
அமைவிடம்
பச்சமர்ஹி மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோஷங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் மலை வாசஸ்தலம். இதனை சத்புரா ராணி என்றும் அழைக்கிறார்கள்.