
வெளியுலகுக்கு அவ்வளவாக தெரியாத கலைப்படைப்புகளில் இதுவும் ஒன்று. ஒரு காலத்தில் தலைநகராக விளங்கிய இந்த இடம் பின்னர் மரங்கள் அடர்ந்த காடுகளாய் மாறி அனைத்தும் காடுகளுக்குள் புதைந்து போனது. அதன்பின் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்களே இந்த நகரை மீண்டும் வெளிக்கொண்டு வந்தவர்கள். சவ்தா வம்சத்தில் வந்த வன்ராஜ் சவ்தா என்ற அரசர்தான் இந்நகரை தோற்றுவித்தவர். தனது அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்த சம்பராஜ் என்பவரின் பெயரையே இந்த நகருக்கு வைத்தார். இங்கு காணப்படும் பாறைகள் சமபக் மலரின் நிறத்தைக் கொண்டிருப்பதால் இப்படியொரு பெயர் வந்ததாகவும் கூறுவோர்கள் உண்டு.
இந்த நகரைக் கைப்பற்றிய மஹ்மூத் பெக்டா என்பவர் இதன் பெயரை மஹ்மூதாபாத் என்று மாற்றி தனது ராஜ்ஜியத்தின் தலைநகராக வடிவைமைத்தார். 23 ஆண்டுகள் இரவு பகல் பாராமல் இந்த நகரின் புதுப்பிப்பு பணிக்கான அலங்கார வேலைகளை செய்தார். அதன்பின் முகலாயர் வசம் இந்நகரம் வந்தது. அவர்கள் மீண்டும் அஹமதாபாத்தை தங்களின் தலைநகராக மாற்றிக் கொண்டார்கள். அத்தோடு சம்பானேர் நகரத்தில் அழகும் புகழும் மங்கத் தொடங்கியது. நகரின் அற்புதமான கட்டடச்சின்னங்கள் எல்லாம் வனப்பகுதியில் மூழ்கி மறைந்தன.
பல ஆண்டுகள் காட்டுக்குள் மறைந்திருந்த நகரை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தனர். 2004-ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் பட்டியலில் இந்நகரையும் இணைத்தது. அன்றிலிருந்து சுற்றுலாவின் முக்கியத்துவம் பெற்ற நகரமாக புகழ் பெற்று வருகிறது. அனாலும், பலரும் அறியாத ஒரு பொக்கிஷமாகவே இந்த இடம் உள்ளது.
வானிலை
வரலாற்று சின்னங்களை அலைந்து திரிந்து பார்க்கவேண்டி இருப்பதால் கோடைக்காலம் இங்கு செல்ல ஏற்ற காலம் அல்ல. டிசம்பர் முதல் பிப்பரவரி உள்ள குளிர்க் காலமே இங்கு செல்ல ஏற்ற காலம்.
எப்படி போவது?
சம்பானேர் நகருக்கு அருகிலுள்ள விமான நிலையம் வடோதரா. 42 கி.மீ. தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. 155 கி.மீ. தொலைவில் மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளது. ரயில் நிலையமும் வடோதரா நகரிலே அமைந்துள்ளது. வடோதரா நகரிலிருந்து சாலை மார்க்கமாக சமபானேர் நகரை வந்தடையலாம்.
எங்கு தங்குவது?
‘ஹோட்டல் சர்வோட்டம்’ தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.1,800 கட்டணமாகப் பெறப்படுகிறது. முன்பதிவுக்கு +91-2676 247223 / 224 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.