
தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டிருப்பதும், வானிலை முன் அறிவிப்பில் மிகப்பெருவாரியாக துல்லியமான கணிப்புகள் வெளியிடப்பட்டு வருவதும், இந்தியா விண்வெளித் துறையில் அடைந்துள்ள வெற்றியை பறைசாற்றுவதாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
38 முறைகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் 39வது முறையாக 104 செயற்கைக்கோள்களைத் தாங்கி விண்ணில் ஊடுருவியது பிரமிப்பானதே. செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புகின்ற தொழில் நுட்ப நடவடிக்கைகள் மிகுந்த பொருட்செலவை கொண்டிருப்பவை என்றபோதும், 2013-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை மிக மிகக்குறைவான செலவில் அதாவது, அமெரிக்காவின் நாசா செய்யக்கூடிய செலவில் 10ல் ஒரு மடங்கு செலவில் 78 மில்லியன் டாலர்களில் அதனை இஸ்ரோ அமைப்பு சாதித்தது இத்துறையில் இந்தியாவிற்கு உள்ள அளப்பறிய ஆற்றலைக் காட்டுவதாக உள்ளது.
மிகுந்த குறைவான விலையில் மிகவும் மேம்படுத்தப்பட்ட விண்வெளி தொழில்நுட்பத்தைக் கொண்டு இஸ்ரோ செயல்படுவதன் காரணமாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் நாம் விண்ணுக்கு அனுப்பிவருவது குறிப்பிடத்தக்க சாதனையே. பொதுவாக பொதுத்துறை அமைப்புகள் என்றாலே திறமை குறைவானவை என்கிற எண்ணம் அனைவரிடத்திலும் ஏற்படும் என்றாலும், இஸ்ரோ அமைப்பு அதனின்று தனித்து நட்சத்திரமாய் ஜொலிப்பது வரவேற்கத்தக்கதே. இஸ்ரோவைப் போன்றே இன்னொரு பொதுத்துறை அமைப்பான டிஆர்டிஓ அமைப்பும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகம் வியக்கத் தக்க சாதனைகளை செய்துள்ளதையும் உணர முடிகிறது. பிரம்மோஸ், அக்னி, துருவா போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகளோடு அர்ஜூன் வகை டாங்குகள் போன்றவை பாதுகாப்புத்துறை தொழில் நுட்பத்தில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதாகவே உள்ளது.
இதுபோன்று குறிப்பிட்ட பொதுத்துறை அமைப்புகள் மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொண்டு சமூகத்திற்கும் பெரும்பங்கு ஆற்றிவரும் நிலையில், நாட்டின் பொதுத்துறை அமைப்புகள் அனைத்தும் இதுபோன்ற மேம்பட்ட திறன்மிகுந்த செயல்பாடுகளை கொண்டிருக்குமானால், அது நாட்டை முன்னேற்றப் பாதைக்கு மிக விரைவில் கொண்டு சேர்க்கும் ஆயுதங்களாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையமும்கூட தற்போது நாட்டிலுள்ள 640 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ற வானிலை கணிப்புகள், சாகுபடி குறித்த அறிவுரைகள் போன்றவற்றை வழங்கத்தக்க தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளதும், இந்தியாவில் பொதுத்துறை அமைப்புகளில் திறமைக்கு பஞ்சமில்லை என்பதை காட்டுவதாகவே உள்ளது.
மேலும் தற்போது மைக்ரோ செயற்கைக் கோள்களை உள்நாட்டிலேய உருவாக்கி அவற்றை ஒட்டுமொத்தமாக விண்வெளிக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை இந்தியா கைவரப்பெற்றுள்ளதால் இத்துறையில் வரும் நாட்களில் மகத்தான வாய்ப்புக்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. உலகின் எந்த மூலைக்கும் மிக வேகமான இணையதள சேவையை வழங்கத்தக்க வகையில் அமைந்துள்ள இத்தகைய சிறு சிறு செயற்கைக் கோள்களை வரும் நாட்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் எண்ணிக்கை அளவிற்கு பல்வேறு அமைப்புகளுக் காகவும், நாடுகளுக்காகவும் இந்தியா விண்ணில் ஏவ உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விண்வெளித்துறையில் மகத் தான சாதனை புரிந்துவரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள இந்திய பிரதமருடன் ஒவ்வொரு குடிமகனும் இணைந்துள்ளது யதார்த்தம்.