
இந்தியாவிற்கு இளமையான நாடு என்றொரு பெயர் இருக்கிறது. உலகிலேயே இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடு இது. ஆனால் இந்த பெருமை எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இருக்கும்போல. அந்தளவிற்கு முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்களை சீனியர் சிட்டிசன் என்று அழைக்கிறார்கள். நமது அரசு இதற்கோர் அளவுகோல் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு 65 வயது, பெண்களுக்கு 60 வயது. ஆனால் உளவியலின் கணக்குப்படி ஒருவருக்கு முதுமை என்பது 50 வயதிலேயே தொடங்கி விடுகிறது.
முதுமைக்கு காரணமாக இருப்பது மூளைதான். மனிதனுக்கு 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறையத் தொடங்குகிறது என்கிறது மருத்துவ உலகம். சராசரியாக 1394 கிராம் எடை கொண்ட மூளை, அதன்பின் 1161 கிராமாக குறைந்துவிடுகிறது. அதோடு மூளைக்குப் போகும் ரத்தமும் 20 சதவீதமாக குறைந்து விடுகிறது. மூளையில் ஏற்படும் இந்த மாற்றம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.
நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண், காது, சுவையுணர்வு, வாசனையுணர்வு, தசைகளின் இயக்கம், உணர்திறன் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைகிறது. நரம்பணு இழப்பும், இணைப்புத் திசுக்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த எடை குறைவுக்கு காரணம் என்கிறது மருத்துவ உலகம். மேலும் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் சிங்குலேட் மேடு என்ற பகுதிதான் மனதை கட்டுப்படுத்துகிறது. முதுமை வந்தபின் இவைகள் தங்கள் சக்தியை இழந்து விடுகின்றன. இதனால் முதுகெலும்பும் பாதிக்கப்படுகிறது. உணர்வு முடிச்சுகள், உள் மூளை நரம்பு அணுக்கள், சிறு மூளை அணுக்கள் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்து விடுகிறது.
ஒரு மனிதனுக்கு வயதான பின்புதான் அல்ஜீமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன. இவைகள் ஒரு மனிதனின் சுய நினைவாற்றல் , மானம், வெட்கம் ஆகிய உணர்வுகளை மழுங்க செய்துவிடுகிறது. இதன் தாக்கம் உள்ளவர்கள் நெருப்பு, மின்சாரம், கத்தி போன்றவற்றின் ஆபத்தை உணராமல் செயல்படுவார்கள். காலை, மாலை, நேரம் போன்ற எதுவும் புரிந்துகொள்ள முடியாது. உடையில் சிறுநீர் கழிப்பார்கள். குளித்துவிட்டு ஆடை அணியாமல் வெளியே வருவார்கள். இப்படி பல இன்னல்களை கொண்ட முதியோர்களை பாதுகாக்க அரசு இலவச மருத்தவமனைகளில் முதியவர்களுக்கென்று தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டார்கள். வருங்கால இந்தியாவிற்கு முதியோர்கள் எண்ணிக்கை மிகப் பெரிய சவாலாய் இருக்கும் என்பது உண்மை.