Header Banner Advertisement

சிதைந்த நகரின் ஊடே ஒரு பயணம்


journey through shattered city

print

ஹம்பி என்ற இந்த மூன்றெழுத்து சொல், சிறுவயதில் இருந்தே என்னை துரத்தி வந்திருக்கிறது. விஜயநகரப் பேரரசைப் பற்றி படிக்கும் போதெல்லாம் அவர்களின் தலைநகரமான ஹம்பியும் அதன் வர்த்தக செழுமையும் கல்லில் உருவான கலை படைப்புகளும் நம்மை மற்றொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். அதன்பின் நேஷனல் ஜியோக்ரபிக் சேனலில் அதைப் பற்றிய ஆவணப் படம் பார்த்தது, ஹம்பி மீதான ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது.

மிகப் பெரும் சாம்ராஜ்யத்தின் தலைநகர். 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பெரிய நகரம். ஆறு முகலாய சுல்தான்கள் ஒன்று சேர்ந்து வீழ்த்தும் அளவிற்கு வலிமையான பேரரசு. ஆனாலும், தோற்றனர். இப்படியொரு பேரரசு இருந்ததே பிற்காலத்தில் தெரியக்கூடாது, என்று எதிரிகள் நினைத்தனர். அதனால், போர்வீரர்களை கொண்டு இந்த நகரையே அழிக்க ஆணையிட்டனர். 6 மாதங்களாக அழிக்கும் பணியில் போர்வீரர்கள் ஈடுபட்டனர். கோயில்களும், கண்கவர் சிற்பங்களும், கலைஞயம் மிக்க அரண்மனைகளும் இடித்து மண்ணோடு மண்ணாக்கினர். அவர்கள் அழித்து உடைத்துப் போட்ட இடிபாடுகள்தான் இன்றைய ஹம்பியாக நமக்கு காட்சித் தருகிறது. ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் வரலாறுகளை சுமந்து நிற்கும் எச்சங்களாகத்தான் ஹம்பி திகழ்கிறது.

அப்படி சிதைந்த நகரமான ஹம்பி செல்லப்போகிறோம் என்ற நினைப்பே மனதுக்குள் புத்தம் புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. சென்னையிலிருந்து நேரடி ரயில் ஹம்பிக்கு இல்லை என்பதால் பெங்களூரில் இருந்து எனது பயணத்தை துவங்கினேன்.மைசூரிலிருந்து பெங்களூர் வழியாக ஹூப்ளி செல்லும் ஹம்பி எக்ஸ்பிரசில் முன்பதிவு செய்து கொண்டேன். இரவு சரியாக 9.50-க்கு பெங்களூர் வந்த ஹம்பி எக்ஸ்பிரஸ் 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10-க்கு ஹோசபெட் ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு ஹூப்ளி நோக்கி சென்றது. ஹம்பிக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் இதுதான். இங்கிருந்து 13 கி.மீ. பயணித்தால் ஹம்பி வந்துவிடும்.

ஹோசபெட் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவியும் நகரம். அதனால், இங்கு பட்ஜெட் ஹோட்டலில் இருந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரை எல்லா நிலையிலும் தங்கும் விடுதிகள் கிடைக்கும். நமது வசதிக்கேற்ப அதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நானும் ஒரு பட்ஜெட் ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்தேன். வசதியைவிட வாடகை அதிகமாயிருந்தது. அதற்கு காரணம் நான் சென்ற நேரம் ‘ஹம்பி உத்சவ்’ கோலாகலமாக நடந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் அறைகள் வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பு. இதில் வசதியெல்லாம் பார்த்தால் அவ்வளவுதான். அதனால் கிடைத்ததை நினைத்து திருப்திப்பட்டுக் கொண்டேன்.

ஹோசபெட்டில் இருந்து ஹம்பிக்கு நான்கு விதமாக செல்லலாம். ரிகஷா, ஆட்டோ-ரிகஷா, வாடகை கார், நகரப் பேருந்து. நீங்கள் குளிர் காலத்தில் இங்கு சென்றால் ரிக்ஷாவில் பயணிப்பது அற்புதமான அனுபவத்தை தரும். சாலையின் இருபக்கமும் துங்கபத்ராவின் தயவால் செழித்து நிற்கும் பயிர்களின் பசுமையைப் பார்த்து ரசித்தபடி இதமான குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி பயணிப்பது பேரானந்தம். மற்ற காலங்களில் ரிக்ஷா சரிபட்டு வராது.

ஹோசபெட்டில் இருந்து ஹம்பிக்கு இரண்டு பாதைகள் வழியாக செல்லலாம். ஒன்று கட்டிராம்புரா வழி, மற்றொன்று கமலாபுரா வழி. கட்டிராம்புரா வழி விருப்பாக் ஷா கோயில், கடலெகளு கணேசா, அரச மண்டபம், ஹேமகூடா மலைகள் பகுதிக்கு செல்லும். கம்லாபுரா வழி குயின்ஸ் பாத் என்ற ராணிகள் குளிக்கும் இடம் வழியாக சென்று சேர்க்கும். இதில் கட்டிராம்புரா வழியாக செல்வதே சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும். நான் அந்த பாதையில்தான் சென்றேன்.

வரலாற்று சிறப்புமிக்க ஹம்பியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வதற்கே மூன்று நாட்கள் தேவைப்படும். கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள், சரித்திரத்தில் விருப்பம் கொண்டவர்களும் மூன்று நாட்கள் பயணத் திட்டத்துடன் இங்கு வருவது நல்லது. அவர்களுக்கான அத்தனை அற்புதங்கள் இங்கு இருக்கின்றன. இந்த நகரைச் சுற்றிப்பார்க்க சைக்கிள், பைக் போன்றவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். ஆனாலும் ஒரு வழிகாட்டியுடன் பயணித்தால்தான் இதன் பெருமைகளை அறிய முடியும். 12 பேர் கொண்ட ஒரு குழு என்றால் அவர்களுக்கு வசதியாக கர்நாடகா சுற்றுலாத்துறை ஒரு வேனை ஏற்பாடு செய்கிறது. அதிலே கைடுகளும் வந்து விடுகிறார்கள். ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று காண்பிக்கிறார்கள். வேனுக்கு ரூ.1,500 கட்டணமாக பெற்றுக் கொள்கிறார்கள்.

நான் பைக்குடன் கூடிய ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொண்டேன். முதலில் நாங்கள் சென்றது விருப்பாக் ஷா கோயிலுக்கு, ஹம்பியில் பூஜை நடைபெறும் இரண்டு கோயில்களில் விருப்பாக் ஷாவும் ஒன்று. துங்கபத்ரா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தக் கோயில். ஹம்பியில் மிக உயரமான கோபுரம் கொண்ட கோயில் இதுதான். ஒன்பது நிலைகளும் 52 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. அதனால், இதனை ராய கோபுரம்’ என்று அழைக்கிறார்கள். செங்கற்களும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோபுரம் திராவிட கட்டடக்கலையும் ஹொய்சளா கட்டடக்கலையும் இணைத்து கட்டப்பட்டுள்ளது. பலவகையான சுதை சிற்பங்கள் இந்தக் கோபுரத்தின் முதல் தளத்தில் உள்ளன. துளுவ வம்சத்து மன்னர்கள் கட்டிய இந்தக் கோபுரத்தை கி.பி.1509-ல் கிருஷ்ணதேவராயர் மேலும் விரிவுபடுத்தி அழகாக்கினார்.

கோபுரத்தைக் கடந்ததும் மிகப் பெரிய திறந்தவெளி வருகிறது. அதனைக் கடந்துதான் கோயில் மண்டபங்களுக்கு செல்ல வேண்டும். மண்டபத்தின் உட்பிரகாரத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு இருள் நிறைந்த இடத்திற்கு வழிகாட்டி என்னை அழைத்துச் சென்றார். ஒரு வெள்ளை நிற துண்டை எடுத்து தூக்கிப் பிடித்தார். என்னவொரு ஆச்சரியம் விருப்பாக் ஷா கோபுரம் அந்த வெள்ளைத் துணியில் தலைகீழாக தெரிந்தது. அந்த இருட்டறையில் எங்கும் வெளிச்சத்தைக் காணவில்லை. இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டேன். அந்த சுவரில் இருந்த ஒரு சிறு துளையைக் காண்பித்தார். அந்தத்துளையின் வழியாக எதிரே உள்ள கோபுரத்தின் பிம்பம் தலைகீழாக விழுகிறது. இதுதான் இன்றைய கேமரா, சினிமாவிற்கான அடிப்படை. இதனை 500 வருடங்களுக்கு முன்பே நம்மவர்கள் கண்டுபிடித்து கோயிலில் அமைத்திருப்பது என்னை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. “இதற்கே அசந்துபோய் நின்றுவிட்டால் எப்படி? இன்னும் நிறைய சங்கதி இருக்கிறது! வாருங்கள்..!” என்று என்னை அழைத்துச் சென்றார் வழிகாட்டி. வியப்பில் இருந்து விடுபடாமலே அவரைப் பின் தொடர்ந்தேன்.

கோயிலில் கூட்டம் அதிகம் இருந்ததால் சிவனை தரிசனம் பண்ணாமலே திரும்பினோம். கோயிலுக்கு வெளியே மன்மதன் குளம் என்ற பெயரில் தெப்பக்குளம் இருக்கிறது. இதற்கு ஏன் மன்மதன் என்று பெயர் வந்தது என்று கேட்டால், அதற்கு ஒரு புராணக்கதையை சொல்கிறார்கள். சிவன் ஒருமுறை மன்மதன் மீது கோபம் கொண்டு நெற்றிக்கண்ணால் சுட்டுப் பொசுக்கி விட்டாராம். அப்போது நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீக்கதிர்கள் இந்த குளத்தின் நீரில் பட்டு அணைந்ததாம். அதனால்தான் இந்தக் குளத்துக்கு மன்மதன் குளம் என்று பெயர் வந்ததாம். இதில் வருடந்தோறும் தெப்பத்திருவிழா நடைப்பெறுகிறது.

இந்தக் கோயில் இருக்கும் இடத்தை விருப்பாக் ஷாபுரா என்று அழைக்கிறார்கள். இந்தப் பகுதியில் பெரும் வசதி படைத்தவர்களும், மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களும் பால்கனி அமைத்த பெரிய மாளிகையில் வசித்திருக்கிறார்கள். இன்று அந்த வீடுகள் இல்லை. ஆனால், உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். சில நாட்கள் தங்கி ஹம்பியை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆராய்ச்சி செய்யும் வரலாற்று ஆய்வாளர்களும் இத்தகைய வீடுகளில் தங்கிக் கொள்கிறார்கள். வாடகை குறைவு, வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும்.

கோயிலின் எதிரே நீண்டு செல்லும் தெரு விருப்பாக் ஷா பஜார் என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு கி.மீ. நீளம் கொண்ட இந்த தெருவின் இருபுறமும் ஏராளமான கடைகள் இருந்திருக்கின்றன. சீன வியாபாரிகள், பாரசீக வர்த்தகர்கள் போன்ற அயல்நாட்டினர் இங்கு கடை வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். விஜயநகரப் பேரரசின் முக்கிய வியாபார கேந்திரமாக இது இருந்திருக்கிறது.

கடைவீதியின் முடிவில் மாதங்க மலை உள்ளது. இதன் அடிவாரத்தில் பெரிய நந்தி மண்டபம் உள்ளது. அதனுள் மிகப் பெரிய நந்தி விருப்பாக் ஷா கோயிலை பார்த்தப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மண்டபத்தை ஒட்டியபடி செல்லும் படிக்கட்டில் 500 படிகளைக் கடந்து மலை உச்சிக்கு சென்றால் திருவேங்கலநாத கோயிலைக் காணலாம். இங்கிருந்து ஹம்பி நகரையும் துங்கபத்ரா நதியின் அழகையும் பறவைப் பார்வையில் கண்டு களிக்கலாம். ஹம்பி நகருக்கு மூன்று பக்கங்கள் மலைகளாலும் ஒரு பக்கம் நதியாலும் இயற்கையாக அமைந்த அரண் இருக்கிறது. அதனால், எதிரிகள் ஹம்பியை தாக்குவது சிரமமான காரியமாக இருந்திருக்கிறது.

விருப்பாக் ஷா கோயில் அருகில் மற்றொரு அதிசயம் இருக்கிறது. அதன் பெயர் ஹேமகூடா மலை. இந்த சிறிய மலைக் குன்றில் 40-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இவையெல்லாமே சமணர்களின் கட்டடக்கலை வடிவத்தில் அமைந்துள்ளது. கோபுரங்கள் எல்லாம் பிரமிடை நினைவு படுத்துவதாக உள்ளது. இங்கு 17 கோயில்கள், 12 சன்னதிகள், 7 மண்டபங்கள், 2 நுளைவுவாயில்கள், 2 கேலரிகள் இருக்கின்றன. 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவற்றின் வடிவமும் அழகும் வேறு எங்கும் காண முடியாதது.

இந்த மலையில் சசுவேகளு கணேசா என்ற பெரிய விநாயகர் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலை 2.4 மீட்டர் உயரம் கொண்டது. அர்த்தாசனா முறையில் கால்கள் இரண்டும் பக்கவாட்டில அமைந்த இது போன்ற விநாயகரை வேறு எங்கும் காணமுடியாது. இவருக்கென்று கல்மண்டபம் ஒன்று கட்டி வைத்திருக்கிறார்கள். இந்த மலையில் எதிரிகள் வருகையை கண்டறிய உயர்ந்த கோபுரம் போன்ற கோட்டை அமைப்புகளும் இருக்கின்றன.

விருப்பாக் ஷா கோயில் அருகே துங்கபத்ரா நதி ஒரு மலையை சுற்றி வட்டவடிவில் வளைந்து செல்கிறது. அதனால், இந்த இடத்தை சக்கர தீர்த்தம் என்று புனிதமாக அழைக்கிறார்கள். இந்த இடத்தில் இருந்து நதியை பார்ப்பது கொள்ளை அழகு.