Header Banner Advertisement

இந்தியாவின் பெயரை உலகளவில் முன்னிலைப்படுத்த துடிக்கும் ஜூடோ நட்சத்திரம் தீபபிரியா …!


gp muthu Rowdy Baby surya

print

சேலம் ஜாகீர் காமிநாயக்கன்பட்டி எம்.பி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பூபாலன். கட்டட தொழிலாளி. மனைவி, தனலட்சுமி. இவர்களின் மூத்த மகள், தீபபிரியா. சேலம் செயின்ட் ஜோசப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். ஜூடோ விளையாட்டில் சேலம் மாவட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார்.

இதுவரை உள்ளூர், மாவட்ட அளவிலான 25க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வாகை சூடியுள்ள தீபபிரியா, கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாம் இடத்தையும் வென்றிருக்கிறார்.

களத்தில் எதிராளியை எதிர்கொண்ட இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே வீழ்த்திவிடும் திறன் உண்டு. ஜூடோ கலைக்கே உரிய ‘ஹிப் த்ரோ’ நுட்பத்தின் மூலம், எதிரியை சாய்ப்பதை இவர் இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.

தீபபிரியாவின் அப்பா, கபடி வீரர். உள்ளூர் ஆட்டக்காரர். ஆனால் தன் மகளை பெரிய விளையாட்டு வீரராக்க வேண்டும் என ரொம்பவே மெனக்கெடுகிறார், வறுமைக்கிடையிலும்.

“கராத்தே, குங்பூ போல ஜூடோவும் ஒரு தற்காப்புக் கலைதான். கிட்டத்தட்ட மல்யுத்தம் போன்றது. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளி மைதானத்தில் ஹேண்ட்பால் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு வந்த விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர், ஜூடோ என்ற புதுவித விளையாட்டு இருப்பதாகச் சொல்லி, எங்களுக்கு அதன் அடிப்படை பற்றி கற்றுக்கொடுத்தார். அப்போது இருந்தே எனக்கு இந்த விளையாட்டு மீது ஆர்வம் வந்துவிட்டது.

பிறகு, காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த ஜூடோ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதும், ஜூடோவில் முழுமூச்சாக சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை தெரிந்து வைத்திருப்பது நல்லது. ரோட்டில் தனியாக நடந்து செல்லும்போது யாராவது நம்மிடம் வம்பிழுத்தால், அப்போது இந்தக் கலை கைக்கொடுக்கும்.

நல்லவேளை, இதுவரை என்னிடம் யாரும் ரோட்டில் போகும்போது கலாட்டா செய்ததில்லை (சிரிக்கிறார்). இதுபோன்ற கலைகளால் பெண்கள் வழிப்பறி திருடர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பல மாவட்ட வீரர்களுக்கு எதிராகவும் விளையாடி இருக்கிறேன். ஆனாலும், கிருஷ்ணகிரி மாவட்ட வீரர்களுடன் மோதுவது என்பது எப்போதும் ‘டஃப்’ ஆக இருக்கும். கொஞ்சம் ‘இழுத்து’ ஆடுவார்கள். ஆனாலும், இறுதியில் நான் அவர்களை வீழ்த்தி விடுவேன்.

களத்தில், நான் அழுததே இல்ல. ஆனா, என்னைப் பார்த்துதான் சிலர் அழுதிருக்காங்க. ‘ம்…இவ வந்துட்டாப்பா. அவளுக்கு ‘ஹிப் த்ரோ’ நல்லாத் தெரியும். அவ ‘ஸ்கில்லை’ யூஸ் பண்றதுக்குள்ள, நீ அவளை போட்டுரு’னு எதிரணி வீரர்கள் பேசிக்குவாங்க.

களத்தில் மோதும்போது, எதிரணி வீரரின் இடுப்பு பெல்ட்டை பிடிக்கக் கூடாது. முதுகுப்புறமாக பிடிக்கலாம். பெல்ட்டை பிடித்தால், மைனஸ் பாயின்ட் (ஷிடோ) கொடுத்து விடுவார்கள். அதுபோல் முன்கை பகுதியையும் பிடிக்கக் கூடாது. பொதுவாக, இதுபோன்ற தவறுகளை நான் செய்வதில்லை; செய்ததுமில்லை.

ஜூடோ பற்றிய நுணுக்கம் தெரிந்த நீங்கள், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் மூன்றாம் இடமே பிடிக்க முடிந்தது எதனால்?

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் நான் முதல் சுற்றிலேயே சரிவைச் சந்தித்ததுதான் காரணம். அது, 100 கிலோவுக்கு உட்பட்டோருக்கான போட்டி. எனது உடல் எடை 68 கிலோ. என்னுடன் மோதிய கடலூர் வீராங்கனையின் உடல் எடை 100 கிலோ. என்னைவிட உயரமும்கூட. அவளை நான் ‘கிரிப்’ ஆக பிடிக்க முயலும் போது, என்னை தட்டிவிட்டாள். நான் கீழே விழுந்துவிட்டேன்.

இரண்டாவது சுற்றில் திண்டுக்கல் வீராங்கனையுடன் மோதினேன். அவள் 86 கிலோ. பருமனானவரும் கூட. அவளை நான், ‘ஹிப் த்ரோ’ செய்து வீழ்த்தி விட்டேன். பொதுவாக குண்டாக இருப்பவர்களை லேசாக தட்டிவிட்டாலே போதும் கீழே சரிந்து விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதன்படி அவளை நான் சாய்த்துவிட்டேன்.

எனினும் முதல் சுற்றில் சந்தித்த சரிவால், அந்தப் போட்டியில் மூன்றாம் இடமே கிடைத்தது. அதில் எனக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் கிடைத்தது.

நான் போட்டிக்குச் செல்லும்போதே, ‘நீ எப்படியும் ஜெயிச்சிடுவ. நீ தைரியமாக போய் விளையாடு. நான் சாமி கும்பிட்டிருக்கேன்’னு அம்மா சொன்னாங்க. அப்பாவும் ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னார். நானும் ஜெயித்தேன்,” என்கிறார் கண்கள் படபடக்க.

என்னதான் தீபபிரியா ஜூடோ சாம்பியனாக இருந்தாலும், வீட்டில் தங்கைகள் மோகனபிரியா, சந்திரபிரியாவிடம் அதை பிரயோகிப்பதில்லை. ஆனாலும், அவர்களுக்குள் சண்டை இல்லாமல் இல்லை.

தாய் தனலட்சுமி, வீடு பெருக்கச் சொல்லும்போதோ, பாத்திரங்களை கழுவி வைக்கச் சொல்லும்போதோதான் பிரியா சகோதரிகளுக்குள் மோதல் வருகிறதாம். கடைசியில் தங்கைகளே அந்த வேலைகளைச் செய்து விடுவார்களாம்.

மீண்டும் தொடர்ந்தார் தீபபிரியா.

“எங்கள் பள்ளியின் பி.டி. மிஸ்ஸை தெரிந்த மாரிமுத்து என்ற மாஸ்டர் ஒருநாள் எங்கள் பள்ளிக்கு வந்தார். அவர்தான் முதன்முதலில் ஜூடோ பற்றி சொல்லிக் கொடுத்தார். பிறகு, அவரிடம் அவ்வப்போது பயிற்சி எடுத்தேன்.

இன்னும் எங்கள் பள்ளிக்கு ஜூடோ விளையாட்டுக்கென தனி பயிற்சியாளர் கிடையாது. இருந்தால், என்னைப்போன்ற பலரும் விளையாட முன்வருவார்கள்.

மாவட்ட விளையாட்டு மையங்களிலும் இதற்கென விசேஷ பயிற்சியாளர்கள் இருந்தால், ஜூடோவிலும் நாம் சாதிக்க முடியும்.

ஜூடோ விளையாட்டில் நம் நாட்டின் பெயரை உலகளவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் தீபபிரியா.
 இந்தியாவின் பெயரை ஜூடோ விளையாட்டில் உலகளவில் முன்னிலைப்படுத்த துடிக்கும் ஜூடோ நட்சத்திரம் தீபபிரியாவுக்கு நீங்களும் உதவ அவரது கைப்பேசி எண் : 90922 75042

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம்