
முருடேஸ்வரர்: உலகின் இரண்டாவது உயரமான சிவன்; ஆன்மிகத்தின் அற்புதம் கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு ஆன்மிக அற்புதம் இந்த சிவாலயம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டிப்போடும் ஓர் ஆலயம். ஆன்மிகத்தையும் இயற்கையையும் ஒரு சேர கண்டு கழிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். மூன்று பக்கமும் அரபிக் கடல் சூழ்ந்து இருக்கும் கண்டூக மலை மீது இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.
இந்த ஊரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்தக் கோயிலின் கோபுரமும் சிவனின் பிரமாண்டமான சிலையும் தெரிகிறது. முருதேஸ்வர் கடற்கரை சிறிய அலைகளை கொண்ட கடற்கரையாக இருக்கிறது. அதனால் இங்கு நீராடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒருபக்கம் மக்கள் நீராடினாலும் கோயிலின் மறுபக்க கரையோரம் மீன்பிடி படகுகள் நிற்கின்றன. கோயிலுக்கு முன்பே மீன் மார்க்கட் இருக்கிறது. ஒரு சிவன் கோயில் அருகே இப்படிப்பட்ட காட்சிகள் காண்பது அரிதான ஒன்றுதான். ஆனாலும் நாங்கள் சென்ற மழைக்காலத்தில் கூட மீன் வாடை அடிக்காமல் இருந்தது ஆச்சரியமான விஷயம். கோயிலின் நுழைவாயிலைக் கடந்ததும் மிகப் பெரிய கோபுரம் இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் இது. 20 மாடி உயரம் கொண்டது. கோபுர வாசலின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு யானை சிலைகள் நம்மை வரவேற்கின்றன.