
இந்தியாவில் பனி சறுக்கு செய்ய சாதகமான இடங்கள் மிக சொற்பமாகவே உள்ளன. அவற்றில் ஒன்றுதான் குஃப்ரி. கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம் ஆண்டு முழுவதும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரம்.
இயற்கையின் மிக அழகு நிறைந்த பகுதியான மஹசு முகடு, தி கிரேட் இமயமலை இயற்கைப் பூங்கா, ஃபகு போன்ற இடங்கள் இங்குள்ளன. இந்த இயற்கைப் பூங்காவில் 180-க்கும் மேற்பட்ட பறவை மற்றும் விலங்கு இனங்கள் இருக்கின்றன. அமைதியை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஃபகு மிகப் பொருத்தமான இடமாகும். இங்கு நிலவும் பேரமைதி வேறெங்கும் காணமுடியாத அற்புதம். இந்த இடத்தை ஓர் ஆன்மிக அற்புதம் என்றுகூட சொல்லலாம். அந்தளவிற்கு ஏராளமான கோயில்கள் இங்கு நிறைந்துள்ளன. அந்தக் கோயில்கள் மரத்தால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
சாகச பயணம் போவோர்களுக்கும், சாகச விளையாட்டு விளையாடுபவர்களுக்கும் ஏற்ற இடமாக குஃப்ரி உள்ளது. இங்கு பனிமலையில் ஏறலாம், பனிச்சறுக்கில் சறுக்கி விளையாடலாம், குதிரை ஏற்றம் செய்து மகிழலாம். காட்டுக்குள் முகாம் அமைத்து விலங்குகள் மத்தியில் இரவைக் களிக்கலாம், கோ-கார்ட்டிங் போன்ற பனி விளையாட்டுகளையும் விளையாடி மகிழலாம். இது தவிர யாரும் செல்ல முடியாத இடத்திற்கு குதிரையில் பயணம் செய்து .குதுகளிக்கலாம்.
வானிலை
கோடை காலத்தில் 12 முதல் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மழைக்காலங்களில் மிகக் குறைவாகவே மழைப் பொழிகிறது. அப்போது வெப்பநிலை மட்டும் 10 டிகிரி செல்சியசிற்கும் குறைவாக செல்கிறது. குளிர் காலங்களில் எப்போது மைனஸ் டிகிரி செல்சியசில்தான் வெப்பநிலை இருக்கும். மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலமே சுற்றுலாவிற்கு ஏற்ற காலமாகும்.
எப்படி போவது?
சிம்லாவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் குஃப்ரி நகர் உள்ளது. ‘ஐப்பராத்தி’ என்ற விமான நிலையம் 47 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உள்ளது. சென்னையிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் 6 மணி நேரத்தில் சிம்லா சென்று சேருகிறது. விமானக் கட்டணம் ரூ.9,558-ல் இருந்து ஆரம்பமாகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் சிம்லா. சிம்லாவிலிருந்து கல்கா வரை மலை ரயில் உள்ளது. 95 கி.மீ. தொலைவை இந்த ரயிலில் கடப்பது தனி சுகம். கல்காவிற்கு சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. நியூ டெல்லி சென்று மாற வேண்டும்.
எங்கு தங்குவது?
‘குஃப்ரி ஹாலிடே ரிசார்ட்’ தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.5,750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முன்பதிவிற்கு 011 – 46766644, +91 9711601490 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.