
ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கிறது குலு மற்றும் மனாலி. குலுவை கடவுளின் பள்ளத்தாக்கு என்கிறார்கள். அதுபோக கம்பீரமான இமயமலை, ஒரு கவிதை போல நடக்கிற பியாஸ் நதி, பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள், நடுங்க வைக்காத இதமான குளிர் இவையெல்லாம் தான் குலு, மனாலி.
குலுவிலிருந்து 45 கி.மீ. தூரத்திலுள்ள மணிகரன் ஆற்றில் பல அருவிகள் சங்கமிக்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும். இங்கிருந்து இரண்டு மணி நேரத்தில் ரோட்டங் பாஸ் என்ற 13,050 அடி உயரத்தில் ஓர் இடம் வெள்ளை வெளேர் எனப் பூமியெங்கும் பணிப்பரந்து கிடக்கும். நமது மூச்சுக் காற்று ஒரு வெள்ளை புகையாக நம்மை கடந்து போகும். கோட், கேப், கையுறை எல்லாம் போட்டுக்கொண்டால்தான் தாக்குப் பிடிக்க முடியும்.
ஒரு மரப்பலகையிலோ, பழைய லாரி டயரிலோ அமர்ந்து கொண்டு மிகிழ்ச்சியாய் சறுக்கி விளையாடலாம். கீழிறங்கி வந்தால் மகாதேவர் கோயில் என்று ஒரு சிவன் கோயில் உள்ளது. அங்கு வெந்நீர் ஊற்று, குளிக்க குஷியாக இருக்கும். இதையெல்லாம் செய்ய விருப்பமில்லை என்றால் ஹோட்டல் அறையில் அமர்ந்து கொண்டு மலை முகட்டைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதன் தலையில் தொப்பி போட்ட மாதிரிப் படர்ந்திருக்கும் பனி மீது சூரியனின் கதிர்கள் பட்டு பளபளக்கிற காட்சியைப் பார்த்தால் கவிஞராகி விடுவீர்கள்.
ஆப்பிள், சால்வைகள், மரத்தாலான கைவினைப் பொருட்கள் இங்கு பிரசித்தம். மார்ச் முதல் நவம்பர் வரை சீஸன் களைக்கட்டும்.
எப்படிச் செல்வது?
சிம்லாவிலிருந்து 240 கி.மீ. தூரத்தில் உள்ளது. விமான நிலையம் இருக்கிறது. ஆனால், டெல்லியிலிருந்து அல்லது சண்டீகரிலிருந்து பஸ்ஸில் அல்லது வாடகைக்கு காரில் போகலாம். குளிர் காற்று முகத்தில் அறைய, மலைகள் மீது பஸ் வலிந்து நெளிந்து ஏறுவது ஓர் இனிய அனுபவம். போகும் வழிநெடுக பியாஸ் நதி நம் கூடவே பயணிக்கும்.
அருகிலிருக்கும் ரயில் நிலையம் சண்டிகர் 315 கி.மீ., பதான்கோட் 325 கி.மீ. கல்கா 310 கி.மீ. தொலைவில் உள்ளன. ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்ல வேண்டும்.