
தேனி மாவட்டத்தில் இருக்கும் கும்பக்கரை அருவியை சின்னக் குற்றாலம் என்கிறார்கள். மூலிகைச் செடிகளின் வாசமும், வண்டுகளின் ரீங்காரமும், பறவைகளின் கூவல்களும், மிருகங்களின் உறுமல்களும் கதமபமாக ஒலிக்கும் இடம் இந்த அருவி. ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ அருவியாக திகழ்கிறது. இங்கிருந்து கொடைக்கானலுக்கு நடந்தே சென்று விடலாம். மலையேறுபவர்களுக்கு இது சாதகமான பாதை. இந்த அருவியிலிருந்து 15 கி.மீ. நடந்தால் கொடைக்கானலை அடைந்து விடலாம்.
மேற்கு மலைத் தொடர்ச்சி மற்றும் முருகமலையில் உள்ள பம்பார் என்ற இடத்தில் பிறந்து, கொடைக்கானல் மற்றும் வராகநதி நீர்ப்பிடிப்பு பகுதியில் பொழியும் மழையும் சேர்ந்து, பல்வேறு மலைகளைக் கடந்து இயற்கை மூலிகைகளை சுமந்து வருகிறது, இந்த அருவி. எந்த அருவியில் இல்லாத தனிச் சிறப்பு கும்பக்கரையில் உள்ளது.
யானை கஜம், குதிரை கஜம், அண்டா கஜம், வழுக்குப் பறை என்ற இடங்கள் பிரசித்தி பெற்றவை. பாறைகளின் வடிவம் யானையின் தும்பிக்கை போலவும், வயிறு போலவும் காட்சி அளிப்பதால் யானை கஜம் என்றும், அண்டா போல உள்ளதால் அண்டா கஜம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அருவி பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்டும்கூட, மருத மரங்கள் அதிகம் உள்ளதாலும் மருத மரத்தின் வேர்கள் இந்த அருவியின் ஊடே செல்வதால் தொடர்ந்து 40 நாட்கள் குளித்தால் வாத நோய் அணுகாது என்பது முற்காலத்தில் சித்தர்களின் கூற்று.
சனி, ஞாயிறுகளிலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வனத்துறைக்குச் சொந்தமான தங்கும் விடுதியும், பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதியும் உள்ளன. இதில் தங்க வேண்டும் என்றால் முன்னரே பதிவு செய்ய வேண்டும்.
கும்பக்கரை அருவியில் சாப்பிடுவதற்கு ஹோட்டல்களோ, தேநீர்க் கடைகளோ இல்லை. கையோடு உணவுப் பொட்டலங்கள் கொண்டுதான் போக வேண்டும். இந்த அருவி ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதியில் இருப்பதால் மாலை வேளையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மாலையில் காட்டெருமை, சிறுத்தைப் புலி, செந்நாய் போன்றவை உலா வருவதும் உண்டு. ஒருநாள் பிக்னிக் செல்ல, அலுப்பு தீர குளிக்க அருமையான இடம் இது.
மழைக்காலங்களில் அருவியில் நீரின் அளவு மிக அதிகமாக இருக்கும்.
மேலும் அறிந்துகொள்ள
04546-252552.
சுற்றுலா தகவல் மையம், மதுரை.
தொலைபேசி : 0452-2334757, 2342888.
கும்பக்கரை எங்குள்ளது?
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகில் உள்ளது.
எப்படிச் செல்வது?
பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. அதிகாலை, மதியம், மாலை வேளைகளில் அருவிக்குச் சென்று வர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.