Header Banner Advertisement

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்


Madurai Meenakshi Temple Sundraeswar

print
வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய சில இடங்களில் கலைகளின் உன்னதமாக விளங்கும் மீனாட்சியம்மன் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலை மையமாக வைத்துதான் மதுரை மாநகரமே உருவாக்கப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் பாண்டிய நாட்டின் முதல் தலம் இது. தமிழகத்தில் மொத்தம் 366 மீனாட்சியம்மன் கோயில்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது இதுவாகும். இதனை பூலோக கைலாசம் என்று அழைக்கிறார்கள். சிதம்பரம், காசி, காளகஸ்தி வரிசையில் நான்காவது முக்கிய தலமாகவும் விளங்குகிறது. காசிக்கு போனால் மோட்சம், காளஹஸ்தியில் பூஜை செய்தால் மோட்சம், சிதம்பரத்தில் தரிசனம் செய்தால் மோட்சம் என்பார்கள். ஆனால், மதுரையை நினைத்தாலோ, கேட்டாலோ போதும் எல்லா பாவங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று ஹாலாஸ்ய மஹாத்மியம் கூறுகிறது.

மேலும் இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளை உடையது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இதனை ராஜமாதங்கி சியாமள பீடம் என்கிறார்கள். 18 சித்தர்களில் ஒருவராக சிறந்து விளங்கிய சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் இக்கோயில் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும் இது உள்ளது. சிவபெருமான் எல்லாம்வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் தலமாக இது விளங்குகிறது. கலையழகும், சிற்பங்களின் அழகும் நிறைந்திருக்கும் இந்த தலம் திராவிடக் கட்டடக்கலையின் சிறப்பை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறது.

கோயில் வரலாறு

ஒரு சமயம் கடம்பவன காட்டுப்பகுதியில் தனஞ்செயன் என்னும் வணிகன் மணவூர் திரும்பிக்கொண்டிருந்தான். இரவுப்பொழுது தொடங்கியது. அதனால், அந்த வனத்தில் ஓய்வெடுக்க நினைத்தான். அப்போது, அந்த அடர்ந்த கடம்பவன காட்டின் நடுவே ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டு பரவசமானான். உடனே மதுரையை ஆண்டு வந்த மன்னன் குலசேகரப்பாண்டியனிடம் அதை தெரிவித்தான். மறுநாள் மன்னன் கடம்பவன பகுதிக்கு வந்து சுயம்புலிங்கத்தை வணங்கினான். அன்றிரவே மன்னன் கனவில் சொச்சநாதர் தோன்றி ‘வானத்தை நகரமாக்கு’ என்று கட்டளையிட்டார். இதைக்கேட்ட மன்னன் கடம்பவனத்தை மையமாக வைத்து ஒரு கோயிலை கட்டினான்.

கடம்பவனத்தில் சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் கண்ட வணிகன் தனஞ்செயன் மற்றும் முதன்முதலாக கோயில் கட்டிய மன்னனுக்கும் பொற்றாமரைக்குளத்தின் வடக்குக் கரையில் இருவர் சிலையும் எதிரெதிரே கற்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

கோயில் புராணம்

தேவலோகத்தின் தலைவன் இந்திரன், விசுவரூபன், விருத்திராசுரன் ஆகியோரை கொன்றான். அதனால் இந்திரனுக்கு பிரமகத்திதோஷம் (கொலைப்பாவம்) பற்றிக்கொண்டது. அப்பாவும் நீங்க பல தலங்களுக்கு சென்றான். எங்கும் பாவம் நீங்கவில்லை. இறுதியாக கடம்பவனமாகிய மதுரைக்கு வந்தான். மதுரையை அடைந்தவுடன் பிரமகத்திதோஷம் நீங்கியது. அப்போது கடம்பமரத்தின் அடியில் ஒளிப்பிழம்பாய், சுயம்புவாய் தோன்றிய சிவலிங்கம் கண்டான்.

உடனே தேவதச்சனை அழைத்து ஒரு விமானம் அமைக்க உத்தரவிட்டான். 8 யானைகளும், 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் தங்கப்பெற்ற விமானம் அமைத்தான். பின் பொற்றாமரை குளத்தில் நீராடி சிவலிங்கத்தை மனம் உருக வெளிப்பட்டான். சுவாமி சன்னதி கருவறையைச் சுற்றி அமைக்கப்பெற்ற 8 யானைகளும், 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் கொண்ட இந்திர விமானத்தை இப்போதும் தரிசிக்கலாம்.

shutterstockmeenakshi-temple

கோபுரங்களின் வரலாறு

கோபுரங்கள் கோயில்களின் நுழைவு வாயில்களாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். மீனாட்சியம்மன் கோயிலில் சிறிய, பெரிய மற்றும் தங்க கோபுரங்கள் என மொத்தம் 16 கோபுரங்கள் உள்ளன. இவைகளில் 2 தங்க கோபுரங்களும் அடக்கம். நான்கு திசைகளிலும் நான்கு பெரிய கோபுரங்களை கொண்டு விளங்கும் இக்கோயில் மதுரையின் பெருமைமிகு அடையாளமாகும்.

ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட வாயில் தூண்களுடன் தொடங்கி, அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி கருங்கல்லாலானது. உப பீடம், அதிட்டானம், பாதம் ஆகிய பகுதிகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நுணக்கமான பரவசம். கருங்கல் பகுதிக்கு மேல் பல நிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி செங்கல், சாந்து இவற்றைக்கொண்டு கட்டப்பட்டதாகும். கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்கள் கலையழகின் உச்சம்.

மீன் ஆட்சி

பாண்டியர்களின் கொடி சின்னமாக மீன் உள்ளது. மீனைப்போன்ற கண்களை உடையவள் என்று அம்மன் புராணங்களில் வர்ணிக்கப்படுகிறாள். மீன் இமைகளை மூடாது 24 மணி நேரமும் தூங்காது விழித்திருப்பது போல் பக்தர்களை 24 மணி நேரமும் காத்து ஆட்சி செய்வதாக மீனாட்சியின் ஆட்சி சொல்லப்படுகிறது.

meenakshi_amman_madurai

மீனாட்சியம்மன்

மதுரையை மலையத்துவச பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவி காஞ்சனமாலை. இருவருக்கும் குழந்தைப்பேறு இல்லாததால் புத்திரகாமேட்டி யாகம் செய்தனர். அதன் பலனாய், அவ்வேள்விக் குண்டத்திலிருந்து மூன்று தனங்கள் (மார்பகம்) கொண்ட ஒரு பெண் குழந்தையாக, மீனாட்சி தோன்றினாள். அத்தோற்றம் கண்டு மன்னன் கலங்கினான்.

அப்போது ஓர் அசரீரி கேட்டது, “இந்தக் குழந்தை திருமண வயதை அடைந்து, அவள் கணவனை முதன்முதலாக காணும்போது ஒரு தனம் மறையும்” என்றது. பின்பு அந்த குழந்தைக்கு தடாதகை என பெயரிட்டு வளர்த்தனர். அவள் 64 கலைகளையும் கற்று மலையத்துவசனுக்குப் பின் மதுரையை ஆண்டாள். பின்னர் திக்விஜயம் செய்து பலநாடுகளை வென்றாள்.

இறுதியாக திருக்கயிலாயம் சென்றபோது, சிவபெருமானைக்கண்டு அவர் அழகில் மயங்கி நாணம் கொண்டாள். அப்போது மூன்றாவது தனம் மறைந்தது. பின்பு, சிவபெருமானுக்கும் தடாதகை என்ற மீனாட்சிக்கும் திருமணம் நடைப்பெற்றது. மதுரை விழாக்கோலம் பூண்டது.

மதுரை எழுகடல் வீதியில் மீனாட்சியின் தாயான காஞ்சனமாலைக்கு கோயில் அமைந்துள்ளதை இன்றும் பார்க்கலாம்.

பொற்றாமரைக்குளம்

மீனாட்சியம்மன் கோயிலின் தனிப்பெரும் அடையாளங்களுள் கோபுரங்களுக்கு அடுத்தபடியாக இருப்பது பொற்றாமரைக்குளம். இது 165 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்டது. நந்தி மற்றும் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் தனது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக்குளமாகும். தேவேந்திரன் சிவபூஜைக்காக பொற்றாமரை பறித்ததும், நக்கீரர் இறைவனை எதிர்த்து வாதிட்டது. திருக்குறள் அரங்கேறியது என்று பல பெருமைகளைக்கொண்ட இக்குளம் காலத்தின் பொக்கிஷம்.

அஷ்டசக்தி மண்டபம்

அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் இம்மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் எட்டு சக்திகளின் சிலைகள் அற்புதமானவை. மேலும் மீனாட்சியின் வரலாற்றை விளக்கும் சுதை சிற்பங்கள் கண்ணையும் மனதையும் கவரும்.

சுவாமி கருவறை மண்டபம்

கி.பி. 12-ம் நூற்றாண்டில் மன்னன் குலசேகரப்பாண்டியனால் கட்டப்பட்டது. கருவறையில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கமாகும். சிவலிங்கத்தின் அமைப்பு என்பது சமட்டி லிங்கம், வியட்டி லிங்கமாகும். பிற சிவ தலங்களில் தனித்தனி அமைப்புடைய வியட்டி லிங்கம் உள்ளது. மதுரையில் மட்டும்தான் ஒருங்குதிரண்ட அற்புத ஆற்றல் மிக்க சமட்டி லிங்க அமைப்பில் காட்சியளிக்கிறது. வாரணாசி உட்பட பல்வேறு சிவத்தலங்களுக்கு முன்பே தோன்றிய லிங்கம் என்பதால், இதற்கு மூலலிங்கம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

அம்மன் கருவறை மண்டபம்

மீனாட்சி அம்மன் கருவறையில் குழந்தை வடிவத்தில் நின்ற கோலத்தில் சிரித்த முகத்துடன், வலது தோளில் பச்சைக்கிளி உருவேந்தி அழகே உருவாக காட்சி தருகிறாள். அம்மன் முடி மற்றும் கீரிட அலங்காரம், இடதுபக்க கொண்டை வடிவம் நாயக்கர் கால அமைப்பாகும். பச்சை நிற மரகத கல்லால் செய்யப்பட்ட அம்மன் திருவுவச்சிலை வழக்கமான அளவைவிட சற்று குறைந்த அளவில் செதுக்கப்பட்டுள்ளது. சதுர வடிவத்தில் அமைந்த கருவறை, பத்ரம், அகாரை, கர்ணம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. விமானத்தின் மேல்பகுதி தங்க கோபுரமாக ஜொலிக்கிறது.

 

அனுமதி நேரம்

காலை 04.30 முதல் மதியம் 12.30 வரை

மாலை 04.00 முதல் இரவு 09.30 வரை

அனுமதி இலவசம்

கேமரா, செல்போன், லேப்டாப் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கைப்பைகள், டிராவல் பேக்குகள் போன்றவற்றை க்ளாக் ரூமில் வைத்து செல்ல வேண்டும். கூடுமானவரை தங்கியிருக்கும் அறைகளிலேயே இவற்றை வைத்துவிட்டு வருவது நல்லது.

அமைவிடம்

வைகை நதியின் தென் பகுதியில் அமைந்துள்ள மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

எப்படிச் செல்வது?

மதுரை ரயில் நிலையம் மற்றும் பெரியார் நகர்ப் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து டவுன்ஹால் ரோடு வழியாக சென்று கோயிலின் மேற்கு நுழைவு வாயிலை அடையலாம். பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேதாஜி சாலை வழியாக சென்று கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை அடையலாம்.

மேலும் தகவல்களுக்கு

மீனாட்சியம்மன் கோயில் அலுவலகம்

தொலைபேசி : +91 0452 2344360

 சுற்றுலா தகவல் மையம்

தொலைபேசி : +91 0452 2334757