Header Banner Advertisement

சொந்தக்காலில் நிற்க்க சொல்லும் களப்போராளி மேரியின் கதை !


defult-img

print

சமூகத்தளத்தில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக முழு அர்ப்பணிப்புடனும், துடிப்புடனும் செயலாற்றி வரும் மேரி, 2000-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமைக்குச் சொந்தக்காரர். ஆண்களுடன் ஒப்பிடுகையில் இயல்பிலேயே பெண்களுக்குத்தான் பொறுப்புணர்வு அதிகம் என்கிறார்.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மனைவி மேரி. சமூக சேவையில் நாட்டம் கொண்ட மேரி, 1978-79களில், சேலத்தில் இயங்கி வரும், சேலம் சமூக சேவை அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பின் மூலமாக, கர்ப்பிணிகள், சிறுமிகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு, சத்துணவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்து வந்தார்.

பின்னர், ஷீலு பிரான்சிஸ் தலைமையில் செயல்பட்டு வரும் ‘தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு’வில் சேர்ந்து, இன்று வரை பணியாற்றுகிறார். முழுக்க பெண்களே தலைமையேற்று நிர்வகிக்கும் இந்த அமைப்பின் மூலமாக, பல்வேறு மாவட்டங்களில் களப்பணியாற்றி இருக்கிறார்.

“என் கணவர் முத்துசாமியும் நானும் பக்கத்து பக்கத்து தெருவில் வசித்தோம். என்னைப்போல் அவரும் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் அவரை எனக்குப் பிடித்துப்போனது. நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். அவர், மணியக்காரர் குடும்பம்.

இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால், நாங்களே வீட்டிற்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.

மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் தலைமையில் எங்கள் திருமணம் நடந்தது. பிறகு, நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியாகத்தான் வாழ்ந்தோம்.

கொஞ்சகாலம் கழித்தே இருதரப்பு பெற்றோருக்கும் எங்களின் திருமணம் பற்றி தெரியவந்தது. பின்னர், 1998ல், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழுவில் சேர்ந்தேன். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கெல்லாம் இந்த அமைப்புதான் முன்னோடி.

இதன்மூலம் ஏராளமான பெண்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் உதவி பெற்றுத் தந்திருக்கிறோம். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்டுத்திக்கொள்ள வைப்பதுதான் எங்கள் நோக்கம்.

இதுமட்டுமின்றி, மதுவிலக்கு பற்றியும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பே, சசிபெருமாள் அய்யாவுடன் இணைந்து மதுவிலக்கு பிரச்சாரங்களில் களப்பணி செய்திருக்கிறேன். சசிபெருமாள் அய்யாவைப் பொருத்தவரை, வெளியிடங்களில் யார் எது கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்.

களப்பணிக்காக வெளியூர்களுக்குச் சென்றால், நாங்களே தயாரித்த நொய் அரிசி கஞ்சியை குடித்தோ அல்லது ‘பன்’னைத் தின்றோ பசியாறிக் கொள்வோம். இளம்பிள்ளை பகுதியில் அவருடன் இணைந்து நாங்கள்தான் முதன் முதலில் கைத்தறி நெசவாளர்களுக்கென சங்கம் தொடங்கினோம்.

நான் சாதி எதிர்ப்பு, மதுவிலக்கு, விவசாயம், மீனவர் பிரச்னை, பெண் குழந்தைகள் கல்வி குறித்து விழிப்புணர்வு பாடல்களைப் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வேன்,” என்றார்.

மதுவிலக்கு போராட்டங்களில் இயக்கம் சாராத பெண்கள் முன்வருவதில்லையே ஏன்? என்று மேரியிடம் கேட்டோம்.

“முன்பைவிட இப்போது பெண்களிடமும் ஓரளவு அரசியல் விழிப்புணர்வு வளர்ந்திருக்கிறது. வயல்காட்டில் பெண்கள் மதுவிலக்கு, இன்றைய அரசியல் பற்றி எல்லாம்கூட பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களும் சாலைகளில் இறங்கி போராட தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் சமூகம்தான் அவர்களை வர விடாமல் இன்னும் தடுக்கிறது,” என்றார்.

“நீங்கள் ஒருமுறை கைது செய்யப்பட்டதாகக்கூட கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தச் சம்பவத்திற்காக?,” என்றோம்.

“ஒருமுறை அல்ல. இருமுறை கைது செய்யப்பட்டிருக்கிறேன். என் கணவர், மாவோயிஸ கொள்கைகள் மீது நம்பிக்கை உள்ளவர். மக்கள் சேவை என்றளவில் மட்டுமே எனக்கு உடன்பாடு உண்டே தவிர, மாவோயிஸ கொள்கைகள் மீது அல்ல. வருடம் சரியாக நினைவில் இல்லை. அப்போது வாஜ்பாய் பிரதமர் பதவிக்கு வந்த நேரம்.

மதுரையைச் சேர்ந்த மேரி என்ற மாணவி, தமிழ்நாடு பெண்ணுரிமை இயக்கத்தின் சார்பில் ஆத்தூர் பகுதியில் சில போஸ்டர்களை ஒட்டியிருந்தார்.
அது அரசுக்கு எதிரான அமைப்பு என்று சொல்லி, நான்தான் போஸ்டர் ஒட்டியதாகக்கூறி போலீசார் என்னைக் கைது செய்தனர்.

மதுரை மேரி கிடைக்காததால் ஆத்தூரைச் சேர்ந்த இந்த மேரியை (தன்னை) கைது செய்து போலீசார் ‘கணக்கு’ காட்டிவிட்டனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். எனக்கும், நடந்த சம்பவத்திற்கு துளியும் தொடர்பு இல்லை எனத் தெரிந்தும் போலீசார் மனித உரிமை மீறி நடந்து கொண்டனர். இன்று வரை போலீசாரின் பொதுவான குணங்கள் மாறவே இல்லை.

(அப்போது குறுக்கிட்ட மேரியின் கணவர் முத்துசாமி, “என் மனைவியை கைது செய்த போலீசார், எங்கள் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் ஆத்தூர் முழுக்க செய்திகள் பரவின. எங்கு பார்த்தாலும் இதே பேச்சுதான். ஆனால் இதுபோன்ற பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்பியது எல்லாமே போலீசார்தான். ஒருவழியாக போராடி, என் மனைவியை ஜாமீனில் வெளியே அழைத்து வந்தேன்,” என்றார்).

பெண்கள் இணைப்புக்குழு மூலமாக ஆத்தூர் வட்டாரத்தில் தென்னை ஓலை பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல், சிறுதானிய விற்பனை, ஆயத்த ஆடை உற்பத்தி, தையல், கயிறு உற்பத்தி, உணவகம் என பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மேரிக்கு, இயற்கை விவசாயி என்ற இன்னொரு முகமும் உண்டு. அதைப்பற்றியும் அவரே சொல்கிறார்….

“விவசாயிகளிடமும், பெண்களிடமும் உலக வர்த்தக ஒப்பந்தத்தின் பாதிப்புகள் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா சொன்ன இயற்கை விவசாயம் குறித்தும், குஜராத்தை சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் சொன்ன ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

பெண்களை 6 குழுக்களாக திரட்டி, அவர்களுக்கு இயற்கை விவசாயம் செய்ய, கூடமலையில் உள்ள எங்கள் சொந்த நிலத்தையே குத்தகைக்கு விட்டுள்ளோம். இது ஒரு கூட்டுப்பண்ணையம். என்ன விளைச்சல் வருகிறதோ அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்களுக்கு வழங்கக் கேட்டிருக்கிறோம்.

நிலத்தில் வேலை செய்யும் காலங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மதிய உணவும் சொந்த செலவில் வழங்கி வருகிறோம். இதற்கு அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தப் பழக்கத்தை நீங்கள் கொண்டு வந்தால், எங்களிடமும் கேட்பார்கள் என்றுகூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், எங்கள் கொள்கையை நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லை,” என்றார்.

சொந்தக்காலில் நிற்க்க சொல்லும் களப்போராளி  மேரியிடம் பேச அவரது கைப்பேசி எண் : 94447 55832

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம்