
காட்டுத்தனமான வேகத்திற்கு தோதாக ஒரு பெரிய மைதானம் உள்ளது. இதன் பெயர் போனவில்லி என்பது. அமெரிக்காவில் உட்டா மாநிலத்தில் இருக்கிறது. இந்த காய்ந்த நிலம் முடிவில்லாமல் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. சுட்டெரிக்கும் வெயில்தான் இந்த இடத்தின் சூழல். இந்தப் பிரதேசம் வேகப்பிரியர்களின் புனித பூமி.
1914-ம் ஆண்டு டெடி டெட்ஸ்லாப் என்பவர் முதன் முதலாக தனது ‘பென்ஸ் ஸ்போர்ட்ஸ்’ காரை இங்கு 226.76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிக்காட்டினார். இதன்பின்தான் போனவில்லி உப்பு பரப்பில் ரேஸ் வாகனங்களை ஓட்டலாம் என்பது உலகுக்கு தெரிய வந்தது. ஆமாம், போனவில்லியின் தரை மண்ணால் ஆனது அல்ல. அது முழுவதும் உப்பு பரவிய நிலப்பரப்பே.!
டெடிக்கு அடுத்தபடியாக 1935-ல் மால்கம் என்பவர் உலகில் முதன் முறையாக 480 கிலோ மீட்டர் என்ற வேகத்தின் புதிய உச்சத்தை தொட்டார். இதற்குப்பின் போனவில்லி வேகத்தில் உலக சாதனை நிகழ்த்தும் இடமாக மாறியது. பலரும் அதிகபட்ச வேக சாதனைகளை விதவிதமான வாகனங்களில் இங்கு நிகழ்த்தியிருக்கிறார்கள்.
இந்த இடம் உப்புத் தரையாக இருப்பதால் மழைப் பெய்தால் உடனே உப்பு கரைந்து உப்பு சதுப்புநிலம் போல் மாறிவிடும். அதனால் மழைக்காலங்களில் இங்கு ரேஸ் போட்டிகள் எதுவும் நடைபெறாது. அமெரிக்காவின் கோடை காலமான ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இங்கு ஏராளமான போட்டிகள் நடைபெறும்.
ரேஸ்கார்கள் செல்லும் பாதையின் தரத்தை கண்காணிக்கவும், ரேஸ் டிராக்குகளுக்கான 10 மைல் தூரத்தை அளந்து ஒதுக்கவும் மாகாண அரசே உதவி செய்கிறது. 10 மைல் தூரத்தைக்கொண்ட நேரான பாதையில் வாகனத்தை ஓட்டி மகிழ உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்கு குவிகிறார்கள். விமானம் பறக்க உதவும் ஜெட் இன்ஜின் பொருத்திய கார்களை இங்கு பார்ப்பது வெகு சாதாரணம்.
![]() |
திரஸ்ட்-எஸ்.எஸ்.சி. |