Header Banner Advertisement

20 ரூபாய்க்கு வைத்தியம்…!


Remedies for Rs 20

print

எப்பேர்பட்ட செல்வந்தர்களும் இடரி விழும் தருணம், எதிர்பாராத மருத்துவச் செலவுகளின்போது மட்டுமே. நடுத்தர, கீழ்நடுத்தர மக்களின் நிலையோ இன்னும் மோசம். மருத்துவர், அந்த ஸ்கேன் எடு; எக்ஸ் ரே எடு; சளி டெஸ்ட், சிறுநீர் டெஸ்ட் என டெஸ்டுக்கு மேல் டெஸ்ட் வைப்பார்.

மருத்துவர் கட்டணம், சிகிச்சை செலவு என்பதெல்லாம் இல்லாமல் பரிசோதனைக் கட்டணமே பாதி சேமிப்பை கரைத்து விடும்.

இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, குறிப்பாக ஏழை மக்களுக்காகவே உதவ காத்திருக்கிறது, சேலம் சுகம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.

களஞ்சியம் மகளிர் குழுவின் ஓர் அங்கமான இம்மருத்துவமனை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர் சாலையில் இயங்குகிறது. முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது.

“சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் குழுக்களில் முப்பது ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவில் உள்ள எல்லோரும் கூலி வேலைக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சிகள்தான். சாமானிய மக்கள்.

அவர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகவே சுகம் சிறப்பு மருத்துவமனையை தொடங்கினோம். இந்த மருத்துவமனைக்கான பங்கு மூலதனத்தில் மகளிர் குழு பெண்களின் பங்களிப்பும் இருக்கிறது,’ என்கிறார் பச்சியம்மாள்.

சேலம் களஞ்சியம் குழுவின் நம்பிக்கை தரும் அடையாளமாக உருவெடுத்துள்ள பச்சியம்மாள், இம்மருத்துவமனை ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளராகவும் இருக்கிறார்.

களஞ்சியம் உறுப்பினர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இம்மருத்துவமனையால் பயன்பெறுகின்றனர்.

இதற்காக, ‘நலம் நிதி’ என்ற திட்டத்தை செயல்படுத்துகின்றனர். அதாவது, ஒவ்வொரு உறுப்பினரும் நலம் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.100 செலுத்த வேண்டும். அதன்பின், அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் சிகிச்சைக்கு வரும்போது எத்தனை மருத்துவர்களைச் சந்தித்து உடல்நல ஆலோசனை பெற்றாலும், பரிசோதனைகளை செய்து கொண்டாலும் ரூ.20 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

அதாவது, இந்த சேவைகளைப் பெற விரும்பும் ஒருவர், ஒருமுறைக்கு ரூ.20 செலுத்த வேண்டும்.

“பொதுவாக எந்த ஒரு மருத்துவமனையிலும் உள்நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளில் தள்ளுபடி சலுகை அளிப்பதில்லை. எங்கள் மருந்தகத்தில் களஞ்சியம் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும், உள்நோயாளி களுக்கும்கூட அனைத்து வித மருந்து, மாத்திரைகளுக்கும் 12% வரை தள்ளுபடி உண்டு.

வெளியே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க, ரூ.7000 முதல் ரூ.12000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். எங்கள் மருத்துவமனையின் பரிந்துரை கடிதம் பெற்றுச்சென்றால் ரூ.3000க்கு ஸ்கேன் எடுக்கப்படும். சி.டி. ஸ்கேன் எடுக்க ரூ.700 இருந்தால் போதும். இதற்காக சில தனியார் ஸ்கேன் மையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

களஞ்சியம் உறுப்பினர்கள் மட்டுமின்றி வெளி நபர்கள் ஸ்கேன் எடுப்பதற்கும் இதே சலுகைக் கட்டணம் பொருந்தும்.

முற்றிலும் சேவை நோக்கோடுதான் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறோம். இதைப் புரிந்து கொண்டு, மருத்துவர்கள் குழுவினரும் எங்களிடம் அதிக ஊதியம் கேட்பதில்லை.

அதேநேரம், மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. அதிநவீன ஆய்வக வசதி, 12 படுக்கைகள் கொண்ட விசாலாமான அறைகள், அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆம்புலன்ஸ் வாகனமும் உள்ளன.

ரூ.1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். 24 மணி நேர சேவை வழங்குகிறோம்,” என்றார் பச்சியம்மாள்.

65 வயதினிலே முதலாளியாக மாறிய பூச்சி மருந்து குடித்து குடும்பத்துடன் சாகத் துணிந்த தன்னம்பிக்கையுடன் உழைப்பால் உயர்ந்து ஏழைகளுக்கு உதவும் வகையில்  20 ரூபாய்க்கு வைத்தியம் அளிக்கும்  மருத்துவமனையை உருவாக்கியமனுஷி பச்சியம்மாளிடம் பேச அவரது கைப்பேசி எண் : 97881 67674. 

0427-2415700, 4051996.

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம்