
பொதுவாக உயரமான இடத்திற்கு செல்லும்போது மனதில் பயம் இருந்தாலும் அந்த த்ரில், அதற்காகவே அங்கு செல்லுவது என்பது எனக்கு பிடிக்கும். சில சமயங்களில் அந்த உயரத்தில் காற்று வீசும்போது பயம் சற்று அதிகமாகும்….. அதுவே அந்த இடமே சிறிது நகர்ந்தால் என்னவாகும் ?! உலகின் மிக சில நாடுகளிலே மட்டும் நகரும் டவர் என்ற விசித்திரம் இருக்கிறது. அதாவது ஒரு டவரின் உச்சிக்கு சென்று விட்டால், அதில் பல அடுக்குகள் இருக்கும், ஆனால் நடுவில் இருக்கும் அடுக்கு மட்டும் சக்கரம் போல மெதுவாக சுற்றும். உங்களுக்கு அது நகர்வது என்பது தெரியாது, ஆனால் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் உங்களது ஜன்னலுக்கு வெளியில் நீங்கள் காட்சிகள் மாறுவதை பார்க்கலாம் ! அப்படி நான் சென்ற இடம் கே.எல். டவர்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் கோபுரம் கட்டபடுவதற்கு முன்பு இருந்த பெரிய டவர் என்பது இதுதான்….. இதை கே.எல்.டவர் என்பார்கள். 1995ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது தொலைதொடர்புக்கு பயன்பட்டது. உலகின் ஏழாவது மிக பெரிய டவர் என்பது இதன் சிறப்பு. ஆனாலும் இதன் இன்னொரு சிறப்பு என்பது அதன் சுழலும் தளம் தான். இது 421 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடம், வெளியே மலேசியா தலைநகரின் எழில்மிகு தோற்றம், அவ்வப்போது வந்து போகும் ஒளி வெள்ளத்தில் மலேசியா இரட்டை கோபுரம், மெல்லிய மனதை மயக்கும் இசை, மிக சிறந்த உணவுகள், அவற்றோடு நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே 360 டிகிரி கோணத்தில் சுற்றி பார்க்கலாம் !!
இதில் இருக்கும் நான்கு தளத்தில், இரண்டாவதில் இருக்கிறது ‘அட்மாஸ்ஃபியர் 360’ டிகிரி என்னும் உணவகம். மற்ற எல்லா தளங்களும் சுழலாது, ஆனால் இந்த தளம் மட்டும் ஒரு மெல்லிய சுழற்சியில் இருக்கும். இதனால் நீங்கள் ஒரு இரண்டு நிமிடம் நின்றால் வெளியே காட்சிகள் மாறி இருக்கும் ! முதலில் நாங்கள் சென்றபோது இந்த தளத்திற்கு ‘லிப்ட்’ மூலம் சென்றோம், பின்னர் அங்கு இருந்த உணவகத்தில் கண்ணாடியின் அருகில் மேஜை ஒன்று ரிசர்வ் செய்து இருந்தோம். வெளியே மலேசியா ஒளி வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருந்தது. அங்கு பப்பெட் முறை உணவு என்பதால், எழுந்து சென்று உணவை எடுத்துக்கொண்டு திரும்பினால் எங்களது மேஜை இருந்த இடத்தை காணவில்லை ! அப்போதுதான் அந்த தளம் மெதுவாக சுழலும் உண்மையை உணர முடிந்தது. எங்கள் மேஜை 20 அடி தள்ளிப் போயிருந்தது.
உணவு இருக்கும் இடங்கள் எல்லாம் நகராது, அதை தாண்டி வெளி இடங்கள் மட்டுமே சுற்றும் வகையில் அமைத்து இருப்பார்கள். நாங்கள் எங்களது இடத்தை தேடி உட்கார்ந்தவுடன் வெளியே மாறும் காட்சிகளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டோம். ஒரு சமயத்தில் வெளியே ஒளி வெள்ளத்தில் இரட்டை கோபுரம் தெரிந்தது கண் கொள்ளா காட்சி !
உலகின் மிக சிறந்த பல உணவகங்களில் நான் உண்டு இருந்தாலும் இது முற்றிலும் ஒரு புதுமையான ஒரு அனுபவமே ! விஞ்ஞானத்தில் நிறைய புதுமைகள் வந்து அது இப்படிப்பட்ட ஒரு உணவகத்திலும் இருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது ! ஒரு முறை நீங்களும் இது போன்று உண்டு பாருங்கள்…….. சொர்க்கம் என்பது தனியே இல்லை என்று தெரியும் !
உணவக வலைதளம்: http://www.atmosphere360.com.my/
வானிலை
கோலாலம்பூர் வருடம் முழுவதும் சுற்றுலா செல்ல சாதகமான வானிலை நிலவும் இடம். ,ஆனாலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு பருவமழை அதிகம் இருப்பதால் சுற்றுலாவுக்கு உகந்ததாக இல்லை. மே – ஜூலை மாதங்களில் இதமான வானிலையும் நீலவானமும் சுற்றுலாவுக்கு ஏற்ற மாதங்கள். வருடம் முழுவதும் வெப்பநிலை 26 – 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலே இருக்கிறது.
எப்படி போவது?
சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு 4 மணி நேர பயணத்தில் சென்று சேரும் விதமாக நேரடி விமான சேவைகள் உள்ளன. ஏர் ஏசியா விமானக் கட்டணம் ரூ.10,033, மலேஷியா ஏர்லைன்ஸ் விமானக் கட்டணம் ரூ. 16,342. தொலைவு 2,604 கி.மீ. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கே.எல். டவர் 60 கி.மீ. தொலைவில் உள்ளது. பயண நேரம் கார் 45 நிமிடங்கள், ரயில் 55 நிமிடங்கள், பேருந்து 1 மணி 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன.
பார்க்க வேண்டிய இடங்கள்:
பெட்ரோனாஸ் கோபுரம், அக்வாரிய கே.எல்.சி.சி., பறவை பார்க், மெர்டெகா சதுக்கம், பட்டு குகை, ஜென்டிங் ஹைலேண்ட், பெடலிங்க் தெரு ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.