Header Banner Advertisement

ஸ்காட்லாந்து : இயற்கையின் பேரெழில்


Scotland nature

print

இயற்கையின் ஒட்டுமொத்தப் பேரழகும் கொட்டிக்கிடக்கும் இடம் ஸ்காட்லாந்து. பழமையின் கம்பீரமும், புதுமையின் வனப்பும், கைகோர்த்து காட்சியளிக்கும் தேசம் அது. சின்ன வயதிலிருந்தே நாம் கேட்டுப் பிரமித்துப்போன தேவதைக் கதைகளில் வரும் பிரமாண்டக் கோட்டைகளைத் தன்னகத்தே கொண்ட நாடு. வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்காட்லாந்தின் வசீகரங்கள் ஏராளம்.

உலகப்புகழ் பெற்ற எடின்பர்க் கோட்டை, ராயல் பொட்டானிக்ஸ் கார்டன்ஸ், ராயல் மியூசியம், எடின்பர்க் உயிரியல் பூங்கா, பார்வைக்கு எட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் பசும்புல்வெளிகள், கண்ணாடியாக மினுமினுக்கும் நீரோடைகள், ஆறுகள், ஏரிகள் என மானுடமும் இயற்கையும் தனித்தனியே படைத்திருக்கிற மாயாஜாலங்கள் பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை. மே முதல் செப்டம்பர் மாதம் வரை மிகச் சிறந்த சீஸன். சாதாரணமாக கோடை காலங்களில் சராசரி வெப்பநிலை 18 டிகிரிக்குப் பக்கத்தில் இருக்குமாதலால் இந்தியர்களுக்கு குளிர்ச்சியாகவே இருக்கும்.

1400-hero-edinburgh-lothians-scotland-city-imgcache-rev1409170156031-web

ஸ்காட்லாந்தின் இருபெரும் நகரங்கள் எடின்பர்க், கிளாஸ்கோ, குறைந்தது 7 நாட்கள் என்று பயணத்திட்டம் வகுத்துக் கொண்டால்தான், இந்த இரு நகரங்கள் முழுசாக சுற்றிப் பார்க்க முடியும்.

எடின்பர்க்கில் நுழைந்து விட்டால் போதும், ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வெவ்வேறு அனுபவம், அற்புதம். இந்த நகரை யுனெஸ்கோ பாரம்பரிய பகுதியாக பட்டியலில் சேர்த்திருக்கிறது. அதுவும் எடின்பர்க்கின் இயற்கை அழகை அள்ளிப் பருக வசதியாக கண்ணாடியாலான திறந்தவெளிப் பேருந்தில் பயணிப்பது பேரானந்தம். 24 மணி நேரத்தில் நகர் முழுக்க சுற்றிப் பார்த்துவிடலாம்.

எடின்பர்க்கில் மொத்தம் 24 பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. இதில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். இறங்கலாம். 30 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் வந்து போகும். வாரத்தின் 7 நாட்களும் பஸ் வசதி உண்டு.

அடுத்த பெரிய நகரமான கிளாஸ்கோவின் இயற்கை எழிலும், செழிப்பும் அப்படியே சொக்க வைத்துவிடும். இங்கும் அதே திறந்தவெளிப் பேருந்து உங்களை சொகுசாக சுமந்தபடி நகர் முழுக்க சுற்றிக்காட்டும். வரலாற்றுப் புகழ் பெற்ற இங்குள்ள கதீட்ரல் சர்ச், செயிண்ட், முங்கோஸ் மியூசியம் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இன்னொரு சிறு நகரமான விண்டர்மியரில் இங்கிலாந்தின் மிகப் பிரமாண்டமான ஏரி உள்ளது. சிலுசிலுக்கும் இந்த ஏரிக்கரையில் வாக்கிங் போவதும், சுற்றிப் பார்ப்பதும் ரம்மியமான அனுபவம்.

இவற்றையெல்லாம் பார்த்து முடித்துவிட்டால் அப்படியே அருகிலுள்ள லண்டனையும் ஒரு சுற்றுச் சுற்றி விடலாம். இறக்கைக் கட்டி பறக்க வைக்கிற இந்த சுக அனுபவத்திற்கு தேவையானது நிறைய நேரமும் நிரம்பி வழியும் பர்ஸும்தான்.

எப்படிச் செல்வது?

சென்னையிலிருந்து விமானம் மூலம் லண்டன் சென்று அங்கிருந்து ஸ்காட்லாந்து செல்லலாம். சென்னையிலிருந்து துபாய் வழியாகவும் ஸ்காட்லாந்து செல்லலாம். ஒரு நபர் சென்று வருவதற்கான பயணக்கட்டணம் ரூ.40,000.

லண்டனிலிருந்து எடின்பர்க்கிற்கு சொகுசு பஸ், ரயில் அல்லது விமானம் மூலம் போகலாம். சொகுசு பஸ்ஸில் போனால் 12 பவுண்ட் கட்டணம். மெகா பஸ் எனச் சொல்லப்படும் சாதாரண பஸ்ஸில் கட்டணம் குறைவாக இருக்கும். பகல் நேர ரயில்கள் மிகச் சவுகரியமானவை. பயணம் நான்கு நான்கரை மணி நேரமாகலாம். 20 பவுண்ட் அளவிற்கு கட்டணம் இருக்கும். இரவு நேர படுக்கை வசதி கொண்ட சொகுசு ரயில்களும் உண்டு. ஐரோப்பாவில் ரயிலில் போவது ஒரு சுகமான அனுபவம். அவற்றை விட்டால் ஏராளமான விமான சர்வீஸ்கள் உண்டு. 50 பவுண்ட் அட்டணம்.