Header Banner Advertisement

65 வயதினிலே முதலாளியாக மாறிய பூச்சி மருந்து குடித்து குடும்பத்துடன் சாகத் துணிந்த பச்சியம்மாள் !


defult-img

print

 

“பச்சியம்மாள் என்னும் தன்னம்பிக்கை மனுஷி”

எண்பது ஆயிரம் ரூபாய் கடனுக்காக பூச்சி மருந்து குடித்து குடும்பத்துடன் சாகத் துணிந்த பச்சியம்மாள், இன்று பதினைந்து தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியாக வளர்ந்திருக்கிறார்.

‘களஞ்சியம்’ மகளிர் அமைப்பின் சக்திமிக்க பேச்சாளராக, குடும்ப நல ஆலோசகராக பன்முகம் கொண்டிருக்கிறார். அதுவும், அவருடைய 65 வயதினிலே.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சித்தேரி கிராமம்தான், பச்சியம்மாளின் பூர்வீகம். கணவர், ராஜமாணிக்கம். இரு மகள்கள்; ஒரு மகன். 38 ஆண்டுக்கு முன், குடும்பத்துடன் சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் தெருவிற்கு புலம்பெயர்ந்து விட்டார்.

சித்தேரி முதல் சேலம் வரையிலான காலக்கட்டத்தில் அவர் சந்தித்த சோதனைகளும், சராசரி மனித வாழ்வுக்காக சந்தித்த போராட்டங்களும் தமிழ் சினிமாக்க ளில் கூட சித்தரிக்கப்படாதது; ஆனால், உழைக்கும் பெண்கள் பலரின் அனுபவமாக இருப்பது.

“எங்க வூட்டுக்காரர் பள்ளிக்கூட வாத்தியாரா இருந்தாருங்க சார். அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. மனநலம் பாதிச்சாப்புல ஆச்சு. யாரோ செய்வின வெச்சிட்டாங்க. இங்க கெவுருமென்டு ஆஸ்பத்திரிலதான் வூட்டுக்காரர சேர்த்தோம். அப்புறம் நல்லாயிட்டாரு. ஆனா அதுக்கப்புறம் அவரு வாத்தியாரு வேலைக்கு போகல.

அவருக்கு சிகிச்ச செலவு அது இதுனு எண்பது ஆயிரம் பக்கம் கடன் ஆயிப்போச்சுங்க சார். கடன் கொடுத்தவங்க எல்லாம் கேட்டு நெருக்கடி கொடுத்தாங்க.
பார்த்தோம்….எங்க வயலுக்கு வாங்கி வச்சிருந்த பூச்சி மருந்தை சோத்துல கலக்கி சாப்பிட்டு குடும்பத்தோடு செத்துடுவோம்னு முடிவு பண்ணினேன்.

சபரி மலைக்குப் போயி தவமா தவம் இருந்து பெத்த என் பையன் முகத்தைப் பாத்ததும் அந்த டப்பாவ தூக்கி வீசிட்டேன். அப்புறம் அங்கிருந்து கட்டின சேலையோட சேலத்துக்கு வந்துட்டேன். இந்த ஊரு முன்னாடி நாம நல்லபடியாக வாழ்ந்து காமிக்கணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம் வந்துடுச்சி.

நானும் என் வூட்டுக்காரரும் சுண்ணாம்பு அடிக்கிற வேலைக்குப் போவோம். இப்பக்கூட பத்துக்கு எட்டு ரூமுக்கு பதினஞ்சு நிமிஷத்துல சுண்ணாம்பு அடிச்சுப்புடுவேன். சுண்ணாம்பு அடிக்கிற வேலை இல்லேனா கொத்து வேலைக்குப் போவோம். எம்புள்ளைங்கள நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்ல…

வசதி இல்லைங்கிறதால மவளுங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்க முடியல. குடும்ப கஷ்டத்தப் போக்க அவங்களும் தினமும் பச்சப்பட்டாணி விற்கப் போவாங்க. எங்கூட்ல கண்ணு…இப்ப வரைக்கும் ‘டோர்’ (ரேஷன் கடையை டோர் என்றே சொல்கிறார்) அரிசிதான் சாப்பிடறேன். குழம்பு எல்லாம் வைக்க மாட்டேன். காய் வாங்க காசு வேணுமே…வெறும் ரசம்தான். இந்த சோறு கூட இல்லாத நிலைமைலதான் இருந்தோம் (அவருடைய கண்கள் குளமாகின). அதனால சோத்துலகூட ஆடம்பரத்த விரும்பறதில கண்ணு….

கொஞ்ச காலம் தேங்காயை தலைச்சுமையாக சுமந்துகிட்டு தெரு தெருவா போய் வித்திருக்கேன். இரவில் வீட்டு முன்னாடி குழிப்பணியாரக்கடையும் போடுவேன்.

இந்த ஊருக்கு வந்த புதுசுல எனக்கு மாத்திக்க ஒரு சேலைகூட கிடையாது. நான்தான் கட்டுன சேலையோட வந்தவளாச்சே. ஒரு நாள் சுடுகாட்டு ஓரமாக சில பொம்பளைங்க நின்னுட்டு இருந்தாங்க. அங்க போய் விசாரிச்சேன். அஞ்சு ரூபாய்க்கு சேல கிடைக்கும்னு சொன்னாங்க. அந்த சேலைய வாங்கிட்டு வீட்டுக்குப் போனேன். என் வூட்டுக்காரருக் கிட்டயும் சொன்னேன்.

மறுநாள் அந்த புது சேலைய கட்டிக்கிட்டு தேங்கா விற்கப் போகும்போது, ஒரு அம்மா என்கிட்ட வந்து ‘இந்த சேலைய எங்க வாங்கினீங்கனு?’ கேட்டாங்க. நான் நடந்த விவரத்த சொன்னேன். அதுக்கு அந்தம்மா, ‘இந்த சேலை எல்லாம் பொணத்து மேல போடறது. இதைப்போய் ஏன் வாங்கி கட்டியிருக்கீங்கனு’ சொன்னாங்க.

இதைக்கேட்டு நான் பதறிப்போனேன். இது வூட்டுக்காரருக்குத் தெரிஞ்சா திட்டுவாரேனு பயந்துக்கிட்டே அவர்கிட்ட இதப்பத்தி சொன்னேன்…அதுக்கு அவரு, ‘பொணமும் நாமும் ஒண்ணுதானே. இந்த உலகத்துல பணம் இல்லாத எல்லாருமே பொணம் போல தானே…அதுக்கென்ன… உனக்குப் பிடிச்சிருந்தா அந்த சேலைய கட்டிக்க’னு சொன்னாரு (இப்படிச் சொல்லும்போது அவர் தாளாமல் விம்மி அழுகிறார்),” வெள்ளந்தியாகச் சொன்னார் பச்சியம்மாள்.

2002ம் வருஷம்னு நினைக்கிறேன். களஞ்சியம் மகளிர் குழு பத்தி கேள்விப்பட்டு சேர்ந்தேன். அப்போது இங்கிருந்த சபீதா மேடம், கூட்டுறவு வங்கியில் 15000 கடன் வாங்கித்தந்தாங்க. அதை முறையாக கட்டினேன். அப்புறம் இந்தியன் வங்கியில் எங்க குழுவுக்கு 30000 ரூபாய் கடன் கிடைத்தது. அதை வெச்சி என் பையனை படிக்க வெச்சேன்; வெளில வாங்கிய கடனையும் கட்டினேன்.

என் பையன் மணிகண்டனை ஆறாவது சேர்த்த பாரதி வித்யாலயா பள்ளிக்குப் போனேன். அப்போ கட்டட பீஸ் கட்ட 75 ரூபாய் கேட்டாங்க. எனக்கு அது பெரிய தொகைதான். அதனால வீட்டுல இருந்த அண்டாவை அடகு வெச்சி, அந்த பீஸைக் கட்டி, பள்ளியில் சேர்த்தேன். பிளஸ் 2 முடிச்சான்.

காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்க முடியல. அப்புறம் அவனும் சோப்புத்தூள் விற்கும் வேலைக்குப் போனான். வீட்டு வீட்டுக்கு 1000 துண்டு நோட்டீஸ் போட்டா, 60 ரூபாய் கிடைக்கும். அதையும் செய்தான். அப்புறம் வேலைக்குப் போய்க்கிட்ட பி.பி.ஏ படிச்சான். அதை முடிச்சதுக்கப்புறம், ‘அம்மம்மா….எம்பிஏ படிச்சாத்தான் வேலை கிடைக்கும்னு,’ சொன்னான். சரினு களஞ்சியம் அமைப்பு மூலமாக 15000 கடன் வாங்கி, படிக்க வச்சேன்.

அதையும் படிச்சு முடிச்சுட்டு, அம்மா கம்ப்யூட்டர் கத்துக்கிட்டாதான் வேலை கிடைக்கும்னு சொன்னான். நான் அவன ஏசுனேன்….அப்புறம் என்ன பண்றது…மறுபடியும் களஞ்சியம் மூலம் 13000 ரூபாய் கடன் வாங்கி, கம்ப்யூட்டர் கத்துக்க சேர்த்துவிட்டேன்.

பிறகு ஒரு சேட்டுக்கிட்ட வேலைக்கு சேர்ந்தான். படிப்படியாக முன்னேறி, 40 ஆயிரம் சம்பளத்துக்கு வந்தான்.

இந்த நேரத்துலதான் சுந்தரம்னு ஒரு மகராசன் என் வூட்டுக்கு எதேச்சையாக வந்தார். அவர் தன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து வர்றதா சொல்ல…நானும் என் பையனுக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கறதா சொன்னேன்.

என் பையனுக்கு, பொண்ணு கொடுக்க சம்மதிச்சாரு. அப்போ அவரு, என்ன வேணும்னு கேளுங்கனு சொன்னாரு. மகராசன் பொண்ணு கொடுக்கறதே பெருசில்ல கண்ணு…அவர்கிட்ட போயி என்ன கேட்க…. ஒரு பைசா கூட வரதட்சணனு கேட்கல. ஆனா அவர் தன் பொண்ணுக்கு சீர்செனத்தி எல்லாம் செய்தாரு.

சம்பந்திக்காரங்க கூலி வேலை பார்க்கிறாங்களேனு இன்னய வரைக்கும் அவர் எங்கள தரக்குறைவா நினைச்சதே இல்ல…., என்கிறார் பச்சியம்மாள்.

இதற்கிடையே, மாமனார் உதவியுடன் சிவதாபுரத்தில் செங்கல் தயாரிக்கும் ஆலையைத் தொடங்கியுள்ளார் பச்சியம்மாளின் மகன் மணிகண்டன். அந்த ஆலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 15 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அந்த ஆலையின் மேலாளராகவும் பச்சியம்மாள் பணியாற்றி வருகிறார். அவர்தான், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குகிறார்.

‘களஞ்சியம்’ அமைப்பின் ஒரு பிரிவான ‘மக்கள் பரஸ்பரம்’ பிரிவின் அறங்காவலராக இருக்கும் பச்சியம்மாள், ‘களஞ்சியம்’ உறுப்பினர் களின் குடும்பங்களில் ஏற்பட்ட கணவன், மனைவி பிரச்னை, விவாகரத்து, முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும் வழங்குகிறார்.

“சார்…பணம் வந்திருச்சினு ஆடம்பரம் பண்ணக்கூடாது. பத்து ரூபா வந்தாலும் 5000 ரூபா வந்தாலும் என்னிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கணும். சிக்கனம் முக்கியம். ஒரு வூட்டுக்கு வாழப்போற பொம்பள புள்ளைங்க எப்பவும் மாமனார், மாமியார், கொழுந்தனார்களை அனுசரிச்சுப் போகணும். அவங்களும் மருமகள்களை மரியாதையாக நடத்தணும்.

நானும் எங்கூட்டுக்காரரும் 30 வருஷத்துக்கு மேல சபரி மலைக்கு போய்ட்டு இருக்கோம். எல்லாமே கடவுள் அருள்தான் சார். அப்புறம் இன்னொன்னு சார்….இன்னிக்கு நான் ஒரு களஞ்சியம் வட்டாரத்துக்கு தலைவியா, பேச்சாளரா, லீகல் அட்வைசரா இருக்கேன்னா அதுக்கு சிவராணி (களஞ்சியம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்) மேடம்தான் காரணம்.

அவங்களாம் இல்லேனா நான் இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது. அவங்களுக்கு நன்றி சொன்னேன்கிறதையும் மறக்காம போட்டுருங்க சார்,” என்றார் வெள்ளந்தித்தனமாக.

65 வயதினிலே முதலாளியாக மாறிய பூச்சி மருந்து குடித்து குடும்பத்துடன் சாகத் துணிந்த தன்னம்பிக்கை மனுஷி பச்சியம்மாளிடம் பேச அவரது கைப்பேசி எண் : 97881 67674.

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம்