
நிலவேம்பு கசாயம் குடிப்பதால் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் ஆண்மைத்தன்மையில் இழப்பு போன்ற பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் இணை மருத்துவர் பார்த்திபன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் .
நிலவேம்பு கசாயம் தொடர்பாக மருத்துவர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களில் இருந்து தடுக்க, இந்த நிலவேம்புக் குடிநீரை சித்த மருத்துவமனைகளில் கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காய்ச்சி விநியோகித்தோம். அதை எப்படி காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பலமுறை ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
200 மிலி நீரில் நிலவேம்புப் பொடியை 50 மிலி-ஆக வற்றும்படி காய்ச்சி 30 முதல் 50 மிலி வரை பெரியவர்களுக்கும், ஒரு வயதிற்கு மேற்பட்டவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி 5 – 20 மிலி வரையும் பயன்படுத்தலாம்.
இந்த நிலவேம்புக் குடிநீர் தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மேலும், எந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலிலும் இதில் பக்கவிளைவுகள் இருப்பதாக தெரிவிக்கவில்லை. எனவே, முறையாக இதனை ஒரு மருந்தாக அனைத்துவிதமான காய்ச்சல்களுக்கும் பயன்படுத்தலாம்.
இந்த நிலவேம்புக் குடிநீர் காய்ச்சப்பட்ட பின் 3 மணிநேரத்திற்கு மட்டுமே வீரியம் இருக்கும். அதற்குமேல் அதை வைத்திருந்தும் பயனுமில்லை என்று மருத்துவர் பார்த்திபன் கூறினார்