
தார்ச்சாலை அமைப்பதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வசந்த நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், உடனடியாக அவர்கள் வசித்து வரும் தெருவில் தார்ச்சாலை வசதி செய்து தரக்கோரியும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவிடம் புகார் அளித்துள்ளனர்.
மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சித்தலைவர் வீரராகராவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் மதுரை வசந்த நகர் பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் ராமலிங்க நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் ஆட்சித்தலைவர் வீரராகராவிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது :-
தங்களது ஆட்சிக்குட்பட்ட மதுரை வசந்த நகர் (வார்டு எண் 77) ராமலிங்க நகர் 3வது குறுக்குத் தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகிறோம்.
நாங்கள் வசித்து வரும் தெருவினை தவிர்த்து அதனை சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு புதிய தார்ச்சாலை போடப்பட்டது.
இந்த சுழலில் எங்களது தெருவிற்கு மட்டும் ஏன் தார்ச்சாலை போடவில்லை என சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது உங்களது தெருவிற்கு மட்டும் பேவர் பிளாக் சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கூறினர். ஆனால் இது நாள் வரை நாங்கள் வசித்து வரும் மேற்படியான தெருவில் தார்ச்சாலையோ., பேவர் பிளாக் சாலையோ., அமைக்கப்படவில்லை.
இது குறித்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் எவரோ விசாரித்தபோது கடந்த 2006ம் வருடத்திற்கு பின் மேற்படியான தெருவில் மதுரை மாநகராட்சியால் தார்ச்சாலை போடப்படாமலேயே இரண்டு முறை தார்ச்சாலை போடப்பட்டதாகவும் சாலை ஒப்பந்தகாரர்களுக்கு மதுரை மாநகராட்சியால் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் நாங்கள் வசித்து வரும் மேற்படியான தெருவின் நுழை வாயிலின் அருகில் வசிப்பவர்கள் அவர்களது வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை இரவு நேரங்களில் வந்து அங்கு கொட்டி விட்டு செல்கின்றனர்.
மேலும் நாங்கள் வசித்து வரும் மிகவும் பள்ளமான பகுதியாக இருப்பதால் சிறிய மழை பெய்தால் கூட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் செல்ல வழியின்றி நாங்கள் வசித்து வரும் தெருவின் சாலையில் வெகு நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுப் பொருட்கள் கலந்துள்ள மழைநீர் தேங்கியுள்ள சாலையே குழந்தைகள்., முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். மேலும் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் பல்வேறு தொற்று நோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
எனவே எங்களது தெருவில் வசித்து வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய தார்ச்சாலை வசதியை உடனடியாக செய்து கொடுத்திட தங்களது கட்டுப்பாட்டில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட பணிந்து பிராத்தித்து வேண்டுகிறோம்.
மேலும் கடந்த 2006ம் வருடத்திற்கு பின் மேற்படியான தெருவில் மதுரை மாநகராட்சியால் தார்ச்சாலை போடப்படாத நிலையில் இரண்டு முறை தார்ச்சாலை போடப்பட்டதாகவும் சாலை ஒப்பந்தகாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரவலாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க பணிந்து பிராத்தித்து வேண்டுகிறோம் என்று புகைப்பட ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர் .