
பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு- இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி தரிசனமளித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.
இத்தகைய புராணப் பெருமையுடன் திகழ்கிறது, திருச்சிறுபுலியூர்.
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றான இந்தக் கோயில், 11வது தலமாக இடம்பெற்றுள்ளது. பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
108 திவ்ய தேசங்களில் பெருமாள் சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்த தலங்கள் இரண்டுதான். முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக ஆனந்த சயனத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் காட்சி தருகிறார் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.
தில்லையில் நடராஜப் பெருமானை வேண்டி பல காலமாகத் தவம் செய்துவந்தார் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர். அவருக்குக் காட்சி தந்த பரமனிடம், தமக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பரமன், மகாவிஷ்ணு பால சயனத்தில் கோயில் கொண்ட இத்தலத்தே தவம் புரியுமாறு வழி கூறினார். அதன்படி இந்தத் தலம் வந்த வியாக்ரபாதர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், அருள்புரிந்து அருகே வைத்துக் கொண்டார்.
ஆதிசேஷ அம்சமான பதஞ்சலி முனிவரும் பெருமாளின் அருளுக்குப் பாத்திரராகி, பெருமாளின் அருகேயே இருந்துகொண்டார். தில்லையில் சிவநடம் கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும், இங்கே பெருமாளின் அருகே கருவறையில் காட்சி தருகின்றனர். இவ்வாறு, புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது.
இங்கே பெருமாளுக்கு அருள்மாகடல் அமுதன் , சல சயனப் பெருமாள், கிருபா சமுத்திரப் பெருமாள் எனப் பல பெயர்கள். தாயாருக்கு தயாநாயகி, திருமாமகள் நாச்சியார் எனப் பெயர்கள். வில்வ மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பெருமாள் இங்குள்ள நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். சலசயனம், பால வியாக்ரபுரம், திருச்சிறுபுலியூர் என்றெல்லாம் இந்தத் தலத்துக்கு திருநாமங்கள் ஏற்பட்டன.
பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் தருவான் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு வழிபாடுகளைச் செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்.
இந்தத் தலத்தை திருமங்கையாழ்வார் போற்றிப் பாடியுள்ளார்.
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே
(பெரிய திருமொழி 7-9-1)
கள்ளத்தனம் செய்யும் மனம், தூய்மையை அடையும் வழியினை எண்ணுபவர்களே நீங்கள் சிறுபுலியூர் திவ்ய தேசத்தில் உறையும் சலசயனப் பெருமான் திருவடிகளைத் தொழுவீர்களாக. அவன் அருள்மாகடல். எனவே நம் மனதை நிச்சயம் தூய்மை செய்திடுவான். தொன்று தொட்டு விளங்கும் சிறுபுலியூர் திவ்ய தேசமானது, பரந்த நீர் நிலையினை உடையது. அதில் உள்ள அலைகளின் வெள்ளமானது, கரையில் பற்பல மணிகளைக் கொண்டு வந்து தள்ளுகிறது.
இத்தகு பெருமை உடைய சிறுபுலியூர் திவ்யதேசத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமான் எனது உள்ளத்தின் உள்ளேயும் உறைகின்றான். நீங்களும் அவனை தியானம் செய்து மகிழ்வீர்களாக
திருவிழா: தமிழ் வருடப் பிறப்பு(சித்திரைப் பிறப்பு), வைகாசி பிரமோற்ஸவம், ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்ஸவம், (ஐப்பசி மூலத்தில்) மணவாள மாமுனிகள் உற்ஸவம், திருக் கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகியவை இந்தத் தலத்தே மிகச் சிறப்பாக நடக்கும் உற்ஸவங்கள்.
கோயில் திறக்கும் நேரம்: காலை 7-12 மணி வரை, மாலை 5.30-8 மணி வரை
தகவலுக்கு : கோயில் செயல் அலுவலரின் கைபேசி எண் : 97871 07777