
இந்தப் பய புள்ள காக்காக்கு நாம நம்ம ஊர்ல என்னல்லாம் செய்றோம் ? கோவிலே கட்டி வச்சு கும்பிடுறோம். ஒரு நல்ல நாள் பொழுதுனா, காலையிலே எழுந்து வரிஞ்சு வரிஞ்சு சமைச்சு, பச்சை தண்ணி பல்லுல ஊத்தாம, வடை, பாயசம் ,பருப்பு ,நெய் ,எள்ளு சாதம்,ஒன்னுவிடாம இலையிலே வச்சு, எட்டு ஊரு கேட்க கத்தி அதுக்கு விருந்து வக்கிறோம் .
இந்த ஊருலே பாருங்க காக்காவே ரொம்ப இல்லை. இங்கே ஒன்னு, அங்கே ஒன்னு கதைதான். சாம்பல் கழுத்துள்ள நம்ப ஊரு காக்கா இல்லவேஇல்லை. அம்புட்டும் அண்டங் காக்கா தான்.
இந்த கோட்டையிலே நான் பார்த்ததும் அந்த வகை காக்காதான்.
இதை Ravens of the Tower of Londonன்னு சொல்றாங்க .இதுங்க இங்க 300/400 வருஷமா பரம்பரையா இருக்காம். குறைந்த பட்சம் 6 காக்கைகளாவது கட்டாயம் இருக்கனுமாம் அந்த கோட்டையிலே . அப்படி இல்லைன்னா, ஆளும் வர்க்கத்துக்கு ஆபத்தாம். அவங்க நம்புறாங்க அந்த மாதிரி.
அதுக்காக ஒரு 10 காக்காங்களை பிடிச்சு கூண்டுல போட்டு வச்சிருக்காங்க.
எனக்கு ஒரே மகிழ்ச்சியாவும், மன நிறைவாகவும் இருந்துச்சீங்க. என்ன காக்காவை பாத்தான்றீங்களா? இல்லை ! முட்டாள்த்தனமும், மூட நம்பிக்கைகளும் நமக்கு மட்டுமல்ல
மானிட இனத்துக்கே தனிப் பெரும் கொடை என்ற பரந்த எண்ணமும்,அதிகாரமும் பதவி ஆசையும் எல்லா நாட்லயும் ஒரே மாதிரிதான்,எல்லைப் பிரிவெல்லாம் கிடையாது அதுக்காக அவங்க என்ன வேணா செய்வாங்க என்ற தெளிவும் தான்.
அந்த காக்காங்க ஒவ்வொன்னும் நல்லா மொழு மொழுன்னு பாலீஷ் போட்டமாதிரி , ஒரு சின்ன கோழி சைஸ்ல இருக்குங்க. சத்தியமா – நம்புங்க. எல்லோரையும் ரொம்ப விரோதமா பாக்குதுங்க. ராசா வூட்டு காக்காங்க இல்ல. அதான். அந்த காக்காங்களை பாத்துக்கிறவரு R u from Asiaன்னு கேட்டாரு.Yes I am an Indianன்னு ச்சும்மா பிச்சு ஒதர்னேன் பாருங்க, பயந்து போய் கொஞ்சம் பிரெண்டு ஆயிட்டாரு. is this is saree? lovelyனாரு. சரிங்க, அது போவட்டும். இதுங்களை புடிச்சு உள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதுங்க என்னப்பா சாப்பிடும்னு கேட்டேன். பக்கத்துலே இருந்த போர்டை காட்டுனாரு. அதிலே These Ravan Crows are fed with raw meat and biscuits soaked in Blood ன்னு தெளிவா எழுதியிருந்தது. யாரோட ரத்தம்பான்னு கேக்க பயமாயிருந்தது. அடுத்த நிமிஷம் என்னை அங்கே காணோம்ங்க.
காக்காவையெல்லாம் பாத்து முடிச்சிட்டு, கல்லுங்களையெல்லாம் பாக்க போனோம்.
அதாங்க .. இந்த வைரம், நீலம் ,பச்சை , ரத்னம், மாணிக்கம் அப்டின்றாங்களே அந்தக் கல்லுங்களை. வெள்ளைக்காரங்க, அதுவும் ராசா வூடு. கேக்கணுமா, நம்புளுக்கு பயந்துக்குனு எல்லா நகை நட்டுங்களையும் ரொம்ப பாதுகாப்பா வச்சிருக்காங்க . அப்டியும் ஆரோ இரண்டு தபா ஆட்டையை போட்டுட்டாங்களாம். எல்லாம் உள்குத்து தான்.
சின்ன வயசுல படிச்ச மைதாஸ் கதை ஞாபகம் வந்துச்சு. தட்டு, டம்ளர் ,ஸ்பூன், கத்தி, போர்க், சாப்டற டேபிள், உட்காற நாற்காலி, போட்டுக்குகிற துணி, அம்புட்டும் சொக்கத் தங்கம். பாவம் ரொம்ப கஷ்டம். எப்டித்தான் அவ்ளோ வெயிட்டான துணிங்களை போட்டுக்கினு அம்மாத்தூண்டு ரொட்டி வெண்ணை துன்னுகினு, எவன் எப்ப குத்த வருவானோன்னு பயந்துகினு தூங்காமலே வாழ்ந்தாங்களோ தெரிலே.
அது போவட்டும். எனக்கென்னவோ, சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம் கொஞ்சம் நம்ப கண்ணுக்கு காட்ன மாதிரித் தான் தெர்து. மீதியெல்லாம் எங்கயோ பதுங்கி இருக்குது. அங்க இருக்கறது ரொம்ப கொஞ்சம். அப்புறம் நம்ப ஊர் வைரத்தையும் பார்த்தேன். அதை பல தடவை கட்டிங் மிஷின்ல குடுத்து எடுத்திருக்காங்க போல, ரொம்ப எளப்பாத் தான் தெரிஞ்சுது. என்னை பெரிசா கவரலை.
நம்ப ஊர்ல இருந்து எங்க வைரத்தை குடுங்கன்னு பெட்டிஷன் குடுத்து கினே இருக்காங்களாம். குடுக்கணும்ன்னு ஆரம்பிச்சிட்ட, பய புள்ளங்க யாருக்குன்னு கொடுப்பாங்க. உலகத்தில ஒரு நாட்டையும் விடாம சுரண்டியிருக்காங்க இல்ல.
எனக்கென்னவோ, அவுங்க கிட்ட இருக்கறதால , இதோ என்னை மாதிரி, உங்களை மாதிரி சாதாரண ஜனங்க எட்டி நின்னாவது அதை பாக்க முடிது. நம்ம கிட்ட இருந்து இருந்தா, யாரோட சுவிஸ் பேங்க் லாக்கர்லதானே பதுங்கியிருக்கும்னு தோணுச்சு.
என்னான்றீங்க .
அப்புறம் அந்த ஆபரண காப்பகத்துக்குள்ள போற வழியிலே, ஒரு பிலிம் ஷோ காட்னாங்க . யாரு யாரோட பொண்ணு, பேத்தி, புள்ளை, எத்தனாவது ஜார்ஜ், மேரி, எலிசபத், பீட்டர். . யார் யார் என்ன என்ன மாதிரி துணி போடணும், நகை போடணும், மகுடம்
வச்சுக்கணும் அது மாதிரி. அப்ப சொன்னங்க. நம்ப கோஹினூர் வைரம் வச்ச மகுடம் மகாராசங்களுக்கு ஆவாதாம். only for ladies தானாம். என் தலை கூட காலியாத்தான் இருந்துச்சு. ஹூம் .
நல்ல இருட்டில அந்த ஷோவை பாத்தோம். சரியான வண்ணக் கலவை, நல்ல படப்பிடிப்பு காட்னது எல்லாம் வேற தங்க, வைரமா, என் மருமகளுக்கு மயக்கமே வந்துடுச்சு . அதை பத்தியே பேசிக்கிட்டு வந்தா. நான் சொன்னேன், அதெல்லாம் எப்பவோ ஒரு மரமாகவும், கரியாகவும் இருந்த ஒரு ஜடப் பொருள் தான். இந்த லூசுப் பய மனுஷன் தான் அதுங்களுக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்குறான். ஒரு காலத்துலே தாமிரம் தான் விலை உயர்ந்த பொருள், அப்புறம் ஒரு காலத்துல- வெண்கலம், அப்புறம். இரும்பு. எகிப்திய மகாராஜாக்களும் மகராணிகளும், ஒரு காலத்துல அலுமினிய தட்டுல சாப்பிட்டு, அலுமினிய நகைகள் தான் அணிவார்களாம். அவர்களுக்கு கீழ்பட்டவர்களுக்கெல்லாம் தங்கம். ஏன்னா, அலுமினியத்தை உருவாக்கவும் பிரிக்கவும் அவ்வளவு கஷ்டப்பட்டங்களாம். எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு மதிப்பு. இப்ப கூட பாரு உலகமெங்கும் உள்ள தங்கச் சுரங்கங்கள் வேகமா காலியாகிகிட்டே இருக்கு. அதனால தங்கத்தை விட பிளாட்டினம் விலை உசந்ததுன்னு இப்ப விளம்பரம் கொடுக்குறாங்கன்னேன்.
அம்மா, ஒரு சுவாரசியமான விஷயத்தை கூட ரசிக்க விடாம மொக்கை தத்துவம் சொல்ல உன்னாலதான்மா முடியும். போம்மான்னா. பாவம் சின்ன பொண்ணுதானே.?
கட்டுரையாளர் : டி.கே.சித்ரா