Header Banner Advertisement

விடை அறியாத வினாக்கள்


Answer questions from Unknown

print

வெகு நாட்களுக்கு பிறகு காலை நேரம் மெதுவாக எழுந்து விடியலின் அழகை ரசிக்க நேரம் கிடைத்து இருக்கிறது ராதாவிற்கு. மெல்ல உடலை நெளித்து சோம்பல் முறித்தபடி எழுந்து வந்து பால்கனி கதவை திறந்து நின்றாள்.

கதவை திறந்தவுடன் முகத்தில் பட்ட அந்த குளிர்ந்த காற்று எத்தனை ஏசி வைத்தாலும் ஈடாகாது என்பதை உணர்த்தியது. அரை இருளில் லேசாக வெளிச்சம் வரத் தொடங்கும் நேரத்தில் பறவைகள் இரைத் தேட கிளம்பின. அவற்றின் குரலும் ஒன்றிரண்டு நாய்கள் நடந்து போவோர் வருவோரை பார்த்து குளித்த வண்ணம் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்துக் கொண்டே பால்கனி சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

மனதில் பழைய நினைவுகள் வந்து போனது. இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட இப்படி ஒய்ந்து இருந்ததிலையே என்ற எண்ணம் எழுந்து மறைந்தது. ஒரு சாதாரண குடும்பத்தில் இரு அக்காகளுடன் பிறந்து வசதியான வாழ்க்கை வாழவில்லை என்றாலும் நிம்மதியான சந்தோஷமான நாட்களையே வாழ வைத்தார்கள் அம்மாவும் அப்பாவும். . ஆனால் அதற்கு அவர்கள் தந்த விலை அவர்களை சுற்றி எழுப்பட்ட கேள்விகள் எத்தனை எத்தனை…

இன்று பொருளாதாரத்தில் உயர்ந்து பல படிகளை கடந்து நல்ல நிலையில் இருந்தாலும் அன்று இருந்த எதுவோ ஒன்று குறைந்த மாதிரியான தோற்றத்தை கொடுத்தது. மூன்று மகளை பெற்று பெற்றவர் பட்ட கஷ்டத்தால் ஒரு மகன் போதும் என்று நினைத்து இருந்தாலும். இன்றும் தன் அக்காக்களை பார்க்கும் போது மனதில் எழும் மகிழ்ச்சி தன் மகனுக்கு கிடைக்காமல் செய்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றியது.

ஒரு சாதாரண வேலையில் இருந்த போதும் ஒவ்வொருவரின் தேவைகளை அறிந்து தன்னால் என்ன முடியுமோ அதை பார்த்து பார்த்து செய்தார் தந்தை. பெண்கள் மூவருக்கும் எந்த வருத்தமும் வந்து விடக் கூடாதென்பதில் கவனமாக இருப்பார். அதிலும் ஊரெல்லாம் மூன்றும் பெண்கள் என்று கரித்துக் கொட்டும் போது என் வீட்டு மகாலஷ்மிகள் என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லி மகிழ்வார்…

தன் குடும்பமே உலகம் என்று அம்மாவும் அப்பாவும் வாழ்ந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் யாரிடமாவது எழுந்த கேள்விகள் அவர்களை காயப்படுத்திக் கொண்டே இருந்தது.

அவர்களுடன் முடிந்ததா கேள்விகள் இல்லையே இன்றும் என் மகன் மகள் வரை நாளை பேரன் பேத்திகளையும் தொடரும்….இந்த சமூகமே உறவுகளால் நிரப்பட்டது போல அவர்களின் கேள்விகளாலும் நிரப்பட்டது….

மூவரும் பெண்களாய் பிறந்ததில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. “எப்படி சண்முகம் மூணு பொண்ணுங்களையும் கரை ஏத்தப்போற அதுவும் நீ வாங்குற சம்பளத்தில்?”

வினாவை எழுப்பியவருக்கு பதில் தேவை இல்லை அடுத்தவரின் நிலையை சுட்டிக் காட்டிய சந்தோஷம் மட்டுமே.

அடுத்து பெரிய அக்கா தனத்தின் திருமணத்தின் போது…. ‘இருக்கிறதை எல்லாம் பெரியவளுக்கே செஞ்சிட்டா மீதம் இன்னும் ரெண்டு பொண்ணு இருக்கே என்ன செய்ய போற கமலம் என்று யாரோ ஒரு உறவினரிடம் இருந்து எழுப்பப்பட்டது…”

ஒவ்வொரு கேள்வியையும் உள்வாங்கும் போதும் மனதில் ஏற்படும் வலியும் வாழ்க்கையை பற்றிய பயமும் சந்தோஷங்கள் நம்மை விட்டு என்று தொலைந்து போகுமோ என்று எண்ணத் தோன்றி விடும்.

ரெண்டாவது அக்கா ஜெயா மேலே படிக்க நினைத்த போது வீட்டினர் சில பல விவாதங்களுக்கு பிறகு ஒத்துக் கொண்டாலும் அதன் பின்னர் நட்புக்களிடம் உறவுகளிடம் இருந்து எழுந்த கேள்விகள் அதிகம் படிக்க வச்சிட்டா மாப்பிள்ளை கிடைக்கிறது சிரமம். அதுமட்டும் இல்லாம உன் கிட்டே வசதி இருந்தாலாவது பரவாயில்லை என்று குத்தூசி கொண்டு குத்தும் சொற்கள் வந்து விழுந்தது.

இம்மாதிரி வெவ்வேறு விதமான கேள்விகளை சந்திக்கும் போது அம்மாவின் முகம் கலக்கத்திலும் பயத்திலும் சோர்ந்து போகும். அப்பொழுதெல்லாம் அப்பாவின் வார்த்தைகள் தான் எல்லோருக்கும் தைரியத்தை கொடுக்கும்.

“கமலம் என்ன இது இந்த மாதிரி கேள்விகளை சந்திக்கிறது நமக்கு என்ன புதுசா…..ஒவ்வொரு கேள்விக்கும் நாம பதிலை தேடிக் கொண்டே இருந்தோம்னா நம்ம வாழ்க்கையை நாம வாழ முடியாது. கேட்டவருக்கு தேவை பதில் இல்லை. நம்ம வாழ்க்கை அதிலே உள்ள நிறை குறைகளை நம்மை விட வெளியே உள்ள யாராலையும் சிறப்பா உணர முடியாது. அதற்கு தகுந்தார் போல் முடிவெடுத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகணும். நம்ம பிள்ளைகளின் நலனில் நம்மை விட யாரும் அதிகம் அக்கறை செலுத்திவிட முடியாது அதனால இதை எல்லாம் மனசில வச்சிக்காம விடை தெரியாத வினாக்கள் பின்னாடி போகாம அவற்றை கடந்து போக பழக்கிகனுமா என்பார்.”

“அப்பா சொல்றது தான் சரிமா நம்ம குடும்ப நிலவரம் நமக்குத் தானே தெரியும். அப்பா சொல்ற மாதிரி நீங்க இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க .”

“அவருக்கென்ன ஆம்பளைங்களை யார் கேள்வி கேட்க போறா? இந்த பொம்பளைங்க தானே இதெல்லாம் கேப்பாங்க அவதிபடுறது நான் தானே என்பார்.”

அன்று அம்மா சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை ஆனால் இன்று யோசித்தால் ஆண்கள் யாரும் மற்றவரை அவரின் குடும்ப நிலையை வைத்து கேள்வி கேட்பது போல் தெரியவில்லை. அது ஏன் பெண்களுக்கு மட்டும் இத்தனை ஆர்வம் என்று புரியவில்லை.

இந்த கேள்விகள் சந்தோஷமான நிகழ்வுகளின் போது வந்தால் எதிர்கொள்வதில் அவ்வளவு சிரமம் இருக்காது ஆனால் உச்சகட்டமாக தந்தையின் இறப்பின் போது எத்தனை விதமான கேள்விகளை சந்திக்க நேர்ந்தது. எல்ல்லாவற்றையும் நிறைவாக செய்து முடித்த பின்னரே மனதிற்குள் முழுமை அடைந்த திருப்தியோடு இனி மனைவியை மகள்கள் பார்த்து கொள்வார்கள் என்ற நிம்மதியாக தன் மூச்சை நிறுத்தி கொண்டார்.

ஆனால் அவர் பெண்களை திருமணம் முடித்ததோடு கடமை முடிந்ததாக போய் விட்டதாகவும் சேமிப்பு எதுவும் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் தெரிந்தவர் அறிந்தவர் என்று பாரபட்சம் பாராமல் எங்களின் குடும்ப சூழ்நிலையை பற்றி அலசி ஆராய்ந்தனர்.

அதற்கான தீர்வை அவர்கள் தரப் போகிறார்களா இல்லை அங்கு வந்திருக்கும் நேரம் எதையாவது பேசிவிடும் தீவிரம் மட்டுமே கேள்வியை எழுப்பவர்களிடம். காரியம் முடிந்ததும் தான் என்ன பேசினோம் எதை யாரிடம் கேட்டோம் என்ற நினைவில்லாமல் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் எழுப்பி விட்டு சென்ற பேரலையில் சிக்கித் தவிக்கும் இதயங்கள் மீண்டு வர நெடு நாட்கள் ஆகி விடும்.

இப்படி எண்ண சிதறல்களில் நேரத்தை கணக்கிடாமல் நின்று கொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்ற விஸ்வம்… “என்ன ராதா இந்த நேரம் பால்கனில நின்னுகிட்டு அப்படி என்ன யோசனை என்றான்.”

‘சும்மா பழைய நினைவுகள் அப்புறம் நம்மை சுத்தி உள்ளவங்க நம்ம கிட்ட கேட்கிற கேள்விகளை பத்தியும் அதற்கு அப்பா சொல்லும் விளக்கத்தை பத்தியும் நினைச்சுகிட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்லை.”

“சரி எனக்கு காப்பி வேணுமா நான் போய் பேப்பர் படிக்கிறேன் நீ போட்டு எடுத்து கிட்டு வா.”

ம்ம்..சரி என்று சொல்லி விட்டு வாசல் கதவை திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து காப்பி போட்டுக் கொண்டிருக்கும் போது வேலை செய்யும் பெண் விமலா வந்தாள்.

“வா விமலா நானே நினைச்சேன் இன்னைக்கு நிறைய வேலை இருக்கே சீக்கிரம் வருவியோ மாட்டியோன்னு….”

“அது தான் நேத்தே சொல்லிட்டீங்களே அக்கா தம்பி வர போகுது அது ரூம் எல்லாம் சுத்தம் செய்யணும்ன்னு அதெப்படி வராம போவேன்…”

“‘இரு ஐயாவுக்கு காப்பியை கொடுத்திட்டு வந்து உனக்கும் தரேன் அப்புறம் பாத்திரத்தை தேச்சு வச்சிட்டு போய் ரூமை கிளீன் பண்ணு.”

“சரிக்கா…தம்பி வெளிநாட்டிலே இருந்து தானே வருது வரும்போது வெள்ளைகாரியை கூட்டிட்டு வந்துட்டா என்ன செய்வீங்க அக்கா?”

காப்பியை எடுத்துக் கொண்டு நகர்ந்தவளின் காதுகளில் விழுந்த கேள்வியில் அப்படியே நின்று திரும்பி விமலாவை பார்த்து விட்டு மனதிற்குள் என் மகனை பற்றிய கேள்வியின் தொடக்கம் என்று எண்ணிக் கொண்டு கணவரை நோக்கி நகர்ந்தாள்.

விமலாவின் கேள்வியை செவிமடுத்த விஸ்வம் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தார். அதை பார்த்து ராதாவும் மெதுவாக சிரிக்க விமலாவிற்கு இந்த ஐயாவுக்கும் அம்மாவுக்கும் என்ன ஆச்சு நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி சிரிக்கிறாங்க என்று புரியாமல் நின்றாள்.

COURTESY & SOURCE : – சுதா ரவி –