Header Banner Advertisement

வடுவூர் பறவைகள் சரணாலயம்


Vatuvur Bird Sanctuary

print

தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி சாலையில் அரைமணி நேரப் பயணம் செய்தால், சாலையின் இருப்புறங்களிலும் மா மற்றும் புளியமரங்கள் அணிவகுத்து நிற்க, ஆற்றுப் பாசனமெனினும் பம்புசெட்டுகளால் பசுமை தழைக்கச் சில்லென்ற சிலிர்ப்பை முகத்தில் தெளித்தவாறே வரவேற்கிறது, ‘வடுவூர் பறவைகள் சரணாலயம்’.

1999-ல் சுமார் 208 ஹெக்டர் பரப்பளவில் வெட்டப்பட்ட பெரிய ஏரி, நடுவே கருவேள், கொடுக்காப்புளி மற்றும் நீர்க்கடம்பு என நடப்பட்ட மரங்கள் இன்று பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகின்றன. ஏரியை சுற்றிப் பார்க்க சிமெண்ட் கட்டைகளால் பாதை அமைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் வளர்ந்திருக்கும் மரங்கள் நிழற்குடை விரிக்க, பைனாகுலர் உதவியோடு பறவைகளை பக்கத்தில் பார்க்கலாம்.

keelaselvanoor_bird_sanctuary

வட இந்தியாவிலிருந்து வரும் நத்தை கொத்தி நாரை, உலகளவில் அழியும் தருவாயில் இருக்கும் சாம்பல் நிற கூழக்கடா, இது தங்குற இடத்துல இனப்பெருக்கம் செய்வது அபூர்வம். ரஷ்யாவில் இருந்து வரும் ஊசி வால் வாத்து, பார்ப்பதற்கு பெண் மயில் போல் தெரியும் புள்ளிமூக்கு வாத்து, இமய மலையிலிருந்து வரும் அரிவாள் மூக்கன், நாமக்கோழி, நீர்க்காகம், மடையான், சிறவி, பவளக்காள் போன்ற 60-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இங்கே கூடு கட்டி, குஞ்சு பொறித்து வாழ்கின்றன.

சுமார் 30 அடி உயரத்தில் பார்வையாளர்களுக்கென்றே ஸ்பெஷலாக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ‘பார்வைக்கோபுரங்கள்’, அதன் மீது ஏறிப் பார்த்தபோது பலவிதமான பறவைகளின் ‘கூரலகு’ கண்டு மனசும் இறக்கை கட்டிக்கொண்டு இந்தப் பார்வைக்கோபுரத்தில் நின்று ஒருமுறை பலமாகக் கைதட்டினால் ஆயிரம் பறவைகளுக்கு மேல் ஒரு சேர சிறகடித்துப் பறக்கிற அபூர்வக் காட்சி ஆயுளுக்கும் மறக்காது. தற்போது நான்காயிரம் பறவைகள் இங்கு தங்கியிருக்கின்றன.

பார்வையாளர்கள் பறவைகள் ரசிப்பது மட்டுமின்றி அவற்றின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள மரம் நெடுகிலும், பறவைகளின் படம், பெயர், வாழ்விடம், வருகை என எல்லாவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். நவம்பர் மாதத்தில் இங்கு 20,000 பறவைகள் வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு 

வனக்காவலர், நாகப்பட்டினம் : 04365-253092.

சுற்றுலா தகவல் மையம், பூம்புகார் : 04364-260439.

சுற்றுலாவுக்கு ஏற்ற காலம்

வருடம் முழுவதும் செல்லலாம். ஆனாலும் சீஸன் காலம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்.

வடுவூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

எப்படிச் செல்வது?

வடுவூர் பறவைகள் சரணாலயம் திருச்சிராப்பள்ளியிலிருந்து 75 கி.மீ., தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ., மன்னார்குடியிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சை மன்னார்குடியிலிருந்து பேருந்துகள் உள்ளன. வாடகை காரிலும் அடையலாம்.

எங்கு தங்குவது?

தஞ்சாவூரில் தங்குவதற்கான இடங்கள் உள்ளன.