
சகாரா பாலைவனத்தைக் கடந்தது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய அனுபவங்களில் ஒன்று. மூன்று முறை நான் கடந்திருக்கிறேன். ஜிம்பாப்வேக்கும் செல்லலாம். அந்நாடு மோசமான நிலையில் இருந்தாலும், அங்கிருக்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சி மிக அருமையானது. இந்தியாவில் தாஜ்மகால். மனிதனால் செய்யப்பட மிக அற்புதமான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.படங்களில் தாஜ்மகாலின் அனுபவத்தை அடைத்துவிடமுடியாது. கஜுராஹோவில் உள்ள கோயில்களும் அப்படித்தான். உங்கள் வாழ்நாளில் ஒரு நாட்டுக்குச் செல்லமுடியும் என்றால் அந்த நாடு இந்தியாவாகத்தான் இருக்கவேண்டும். மதம், மொழி, உணவு, மனிதர்கள் என்று மிகுந்த வேறுபாடுகள் கொண்ட நாடு அது என்று நான் அடிக்கடி பிறரிடம் சொல்வதுண்டு.
சீனாவில் டெரகோட்டா போர்வீரர்கள் இருக்கும் இடம் மிக அற்புதமான இடம். அதன் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அங்கு ஐந்து தடவை சென்றிருக்கிறேன். தென் அமெரிக்காவில் அர்ஜென்டினாவில் பெரிட்டோ மோரினோ என்ற ஆண்டிஸ் மலைத்தொடரின் பனிச்சிகரம் இருக்கிறது. மிக அழகான பனிச் சிகரம். இரண்டு தடவை அங்கு சென்றிருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் ஆயெர்ஸ் பாறை, அமெரிக்காவில் கிராண்ட் கேன்யான், கிழக்கு துருக்கியில் ஜார்ஜியா வரை சாலையில் பயணம் செய்வது ஆகியவற்றை மறக்கவே முடியாது.
தங்க விரும்பும் இடம்
நான் சொன்ன அனைத்து இடங்களில் நான் தங்க விரும்பும் இடம் சீனாதான். ஒரே பிரச்னை அது மிகவும் மாசுபட்டுள்ள இடமாக உள்ளது. இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறேன். அது தாஜ்மகால் போன்ற இடம் அல்லதான். ஆனால் நான் முடிவுசெய்து வாழும் இடம் இது. உலகில் மிக அற்புதமான இடங்களை நீங்கள் பார்க்கலாம். ஆனால் நீங்கள் வாழ விரும்பும் இடமாக அவை இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சகாரா பாலைவனத்தில் உறங்குவது கற்பனையே செய்துபார்க்க முடியாத விஷயம். அவ்வளவு சுவாரசியமானதல்ல. விண்மீன்களுக்குக் கீழே மணலில் உறங்குகிறீர்கள்…
பயணிகள் கவனிக்கவும்
சொந்த ஊரில் இருப்பதை விட புதிய இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எங்காவது மறந்துவிட்டுவிடலாம். யாராவது பிடுங்கிச் சென்று விடலாம். தாஜ்மகாலைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு அமர்ந்திருந்தால் உங்கள் பிரீப்கேசை அங்கேயே மறந்துவிடக் கூடும். எங்கு செல்வதற்கும் அஞ்சவேண்டாம். கவனமாக இருந்தால் அனைத்து இடங்களும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள்தான். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லவேண்டாம் என்று யாரும் சொன்னால், அவை எப்போதும் அற்புதமான இடங்களாக இருக்கும். அவை பற்றி நீங்கள் அறிந்திருந்தால் நல்ல அனுபவம் கிட்டும்.
நியூயார்க்கில் ஹார்லம் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் அது நியூயார்க்கில் அற்புதமான இடங்களில் ஒன்று. கொல்கத்தாவில் செல்லக் கூடாத இடங்கள் என்று சிலவற்றைக் கூறுவார்கள். ஆனால் அங்கு செல்ல வேண்டும். நானும் என் மனைவியும் இதுபோன்ற பல இடங்களுக்குச் சென்று நல்ல அனுபவங்களைக் கண்டு அடைந்துள்ளோம்.
ஒரு நாட்டை அறிந்து கொள்ளவேண்டும் என்றால், நேரடியாக அதன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் செல்லாதீர்கள். எல்லை வழியாக சாலையில் கடந்து சென்று நீங்களே சாப்பிட, உறங்க இடங்களைக் கண்டறிய வேண்டும். நாட்டைப் பற்றி அதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பு நிறைய அந்நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வரலாற்றைப் படியுங்கள். உதாரணத்துக்கு பாரீஸ். நீங்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது பற்றி தெரிந்திருக்காவிட்டால் ஒன்றும் பயனில்லை.
ஒரு நாட்டில் இருக்கும் போது கள்ளச் சந்தையைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால்,. கவனமாக இருங்கள்; ஜெயிலுக்குப் போகவேண்டியிருக்கும். அதேசமயம் கள்ளச்சந்தை ஒரு நாட்டைப் பற்றி நிறைய கற்றுத்தரும்.
கட்டுரையாளர்: ஜிம் ரோஜர்ஸ்