
கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் அடம் பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்…. கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் ! ஒரு வடைக்கு இவ்வளவு நீண்ட பயணமா என்று யோசிக்காதீர்கள், வடை மட்டும் இல்லை, ஒரு சரித்திரத்தையே தெரிந்து கொள்ளலாம் !!
விருத்தாசலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி. “விருத்தம்”(பழைய) மற்றும் “அசலம்” (மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே “விருத்தாசலம்” ஆகும். தமிழில் “திருமுதுகுன்றம்” எனவும் “பழமலை” என்றும் வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த இடம், சுமார் ஒன்றரை மணி நேர பயணம் எனலாம். ரெண்டு இட்லி என்று ஹோட்டல் சென்று நீங்கள் வாங்கினால் இலவசம் போல வருவது என்பது இந்த வடை, சட்டென்று அது வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முடியாதவாறு பிரவுன் நிறத்தில் உங்களை கொஞ்சம் ஆட்டம் காட்டும்.
நமது வீட்டில் இரண்டே இரண்டு வடை மட்டுமே பிரபலமாக இருக்கும்…. உளுந்து வடை, மசால் வடை ! அவ்வப்போது கீரை வடை, வாழைப்பூ வடை என்று கிடைக்கும். இதுவே ஹோட்டல் சென்றால் ரச வடை, தயிர் வடை (அதுவும் மேலே பூந்தி போட்டு) கிடைக்கும். அனால் உங்களுக்கு தெரியுமா, அந்த காலத்தில் எண்ணெய் என்பது எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே உபயோகிப்பார்கள் எனும்போது வடை என்பதை எப்படி சுட்டு இருப்பார்கள் என்று ? நீங்கள் வீட்டில் தண்ணி எடுத்து வரும் குடத்தை அந்த காலத்தில் தவலை என்பார்கள். அந்த காலத்தில் செப்பு தவலைகளையே அதிகம் பயன்படுத்தினர்.
பானை எண்ணெய் கொண்டு பொறித்து சாப்பிடுவது என்பது ஆரோக்கியமற்றது என்பதாலும், எண்ணெய் வாங்குவது எல்லோருக்கும் முடியவில்லை என்பதாலும் இந்த வடை என்பதை அவர்கள் செய்ய கையாண்ட விதம் வித்யாசமானது ! அந்த காலத்தில் இருந்த அடுப்பில் நெருப்பை மூட்டி, அதன் மேலே இந்த தவலையை கவிழ்த்து போடுவார்கள். பின்னர் இந்த மசால் வடை போன்ற மாவை தட்டி தட்டி, கவிழ்ந்து இருக்கும் அந்த தவலையின் மீது போடுவார்கள். செம்பு குறுகிய நேரத்தில் வெப்பத்தை கடத்தும் என்பதால், வடை வெகு விரைவாக வேகும். வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மெதுவாகவும் இருக்கும் இதற்கு ரசிகர்கள் அதிகம்.
அன்றைய அந்த சுவையில், சிறிது மாறி கிடைக்கிறது இந்த விருதாச்சலத்தின் தவலை அடை. இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன், சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த ருசி உணவகம். உள்ளே நுழையும்போதே இந்த தவலை வடை வைத்திருப்பதை பார்க்கலாம், இதன் மூலம் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்று தெரிகிறது. கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று எல்லா பருப்புக்களும் கலந்து, அதை மாவை விட கொஞ்சம் குறைவாக அரைத்து, அதை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கும்போது கிடைக்கும் இந்த தவலை வடை காண்பதற்கே ருசிக்கிறது.
ஒரு இடத்தில் மஞ்சளாக கடலை பருப்பு, இன்னொரு இடத்தில வெள்ளையாக உளுந்தம் பருப்பு, உள்ளும் வெளியுமாக துவரம் பருப்பு, கருவேப்பில்லை என்று உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. ஒரு கடி கடிக்கும்போதே வெளியே இருக்கும் மொறுமொறுப்பும், உள்ளே இருக்கும் மெதுவும் என்று அந்த விருதகிரீஷ்வரரை பார்க்காமலே சொர்க்கத்தில் மிதக்கிறோம். இதுவரை மசால் வடையை மட்டும் காட்டி ஏமாத்திட்டீங்களே என்று மனதிற்குள் கத்துகையில், பருப்பு விற்கிற விலைக்கு தவலை வடையா என்று தலையில் நாமே தட்டி கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு கர கர மொறு மொறு சுவைக்கு இந்த தவலை வடையே சரி !! அடுத்த முறை விருத்தாசலம் செல்லும்போது இந்த தவலை வடையை சாப்பிட்டு பாருங்கள், உங்களுக்கே வித்யாசம் தெரியும். உளுந்த வடையையும், கடலை வடையையும் சேர்ந்து செய்த கலவையாய் உங்களுக்கு சுவையூட்டும்.